சதுரகிரி பாதையில் மண் சரிந்ததால் 200 பக்தர்கள் மலையில் தவிப்பு
சதுரகிரியில் பலத்த மழை காரணமாக பாதையில் மண் சரிவு ஏற்பட்டதால் 200 பக்தர்கள் மலையில் தவித்தனர்.
வத்திராயிருப்பு,
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு ஐப்பசி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையையொட்டி சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.
ஆதலால் நேற்று முன் தினம் காலை வனத்துறை கேட் முன்பு பக்தர்கள் குவிந்தனர். இந்தநிலையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டதால் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்க வேண்டும் என அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து அதிகாரிகள், மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று காலை 7 மணிக்கு திறக்க வேண்டிய வனத்துறை கேட் 8 மணிக்கு திறக்கப்பட்டது. பின்னர் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
இதையடுத்து பக்தர்கள் மலை பாதை வழியாக கோவிலுக்கு சென்றனர். பகல் 11.30 மணி அளவில் மலைப்பகுதியில் சாரல் மழை பெய்ததால் வனத்துறை கேட் அடைக்கப்பட்டு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
காலையில் சாமி தரிசனம் செய்ய சென்ற பக்தர்கள் சாமி தரிசனம் செய்து விட்டு அடிவாரப்பகுதிக்கு வந்தனர். நேற்று முன் தினம் மதியம் 2 மணிக்கு மலைப்பகுதியில் பலத்த மழை பெய்ய தொடங்கியது. இதனால் மலைப்பகுதியில் கோணத்தலைவாசல் அருகே மண்சரிவு ஏற்பட்டது.
எனவே இன்று பக்தர்கள் கோவிலுக்கு அனுமதி கிடையாது என கோவில் பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, கோவில் நிர்வாக அலுவலர் விஸ்வநாத் ஆகியோர் அறிவித்தனர்.
மழையின் காரணமாகவும், மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதாலும் சாமி தரிசனம் செய்ய சென்ற 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கீழே இறங்க முடியாமல் தவித்தனர். அவர்கள் கோவில் வளாகத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு உள்ளதாகவும், அவர்கள் வாழைத்தோப்பு பாதை வழியாக இறங்குவார்கள் என்றும் கோவில் நிர்வாகம் அறிவித்திருந்தது. பக்தர்களுக்கு தேவையான உணவு, தங்குமிடம் ஆகிய வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.