பட்டுக்கோட்டையில் பலத்த மழை: தீபாவளி விற்பனை பாதிப்பு; சாலையோர வியாபாரிகள் அவதி
பட்டுக்கோட்டையில் பெய்த பலத்த மழையால் தீபாவளி விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சாலையோர வியாபாரிகள் அவதியடைந்துள்ளனர்.
பட்டுக்கோட்டை,
தஞ்சை மாவட்டத்தில் பட்டுக்கோட்டை, பேராவூரணி தாலுகாக்கள் கல்லணை கால்வாய் பாசன கடைமடை பகுதிகளாகும். கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதி மேட்டூர் அணை திறந்தும் இதுவரை கடைமடை பகுதி பாசனத்திற்கு தண்ணீர் வந்து சேரவில்லை. மேட்டூர் அணை காலத்தில் திறந்து விடப்பட்டதால் இந்த ஆண்டாவது குறுவை, சம்பா சாகுபடி நடைபெறும், தீபாவளியை சிறப்பாக கொண்டாடலாம் என்று நம்பியிருந்த விவசாயிகள் சம்பா சாகுபடி கூட செய்ய முடியாமல் கவலை அடைந்து உள்ளனர். இந்தநிலையில் தீபாவளி இன்று(சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்தநிலையில் பட்டுக்கோட்டை பகுதியில் நேற்று அதிகாலை லேசான மழை பெய்தது. அதனை தொடர்ந்து காலை 9 மணிக்கு பலத்த மழை பெய்தது.
வியாபாரிகள் அவதி
அப்போது கிராமப்புறங்களில் இருந்து விவசாயிகள், தொழிலாளர்கள், பொதுமக்கள் பொருட்கள் வாங்குவதற்காக பட்டுக்கோட்டைக்கு வந்தனர். மேலும் கரூர், சேலம், திருப்பூர், ஈரோடு பகுதிகளில் இருந்து வந்த ஜவுளி வியாபாரிகள் பட்டுக்கோட்டை பெரியதெரு, மணிக்கூண்டு, பழனியப்பன்தெரு, பெரிய கடைத்தெருவில் சாலையோர கடைகள் வைத்து வியாபாரத்தில் ஈடுபட்டனர். அப்போது பெய்த மழை தண்ணீர் தெருக்களில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் தீபாவளி விற்பனை பாதிக்கப்பட்டது. மேலும் சாலையோர வியாபாரிகள் தங்களது கடைகளின் பொருட்களை பாதுகாப்பதற்காக தார்ப்பாய் போட்டு மூடி வைத்திருந்தனர். இந்த மழையால் சாலையோர வியாபாரிகள் வியாபாரம் செய்ய முடியாமல் அவதியடைந்தனர்.
அதிராம்பட்டினம்
இதேபோல் அதிராம்பட்டினம், தம்பிக்கோட்டை, மறவக்காடு, ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் நேற்று காலை பலத்த மழை பெய்தது. இந்த மழையால் தீபாவளிக்கு பொருட்கள் வாங்குவதற்காக அதிராம்பட்டினத்திற்கு வந்த பொதுமக்கள் பொருட்கள் வாங்க முடியாமல் அவதியடைந்தனர். ஆனாலும் மழையில் நனைந்தபடியே ஒரு சிலர் தீபாவளி பொருட்களை வாங்கி சென்றனர்.