கர்நாடகத்திற்கு வெள்ள நிவாரண பணிகளுக்கு ரூ.577 கோடி மத்திய அரசு முடிவு

கர்நாடகத்தில் வெள்ள நிவாரண பணிகளுக்காக ரூ.577 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

Update: 2020-11-13 21:00 GMT
பெங்களூரு, 

கர்நாடகத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் தொடங்கி அக்டோபர் மாதம் வரை 3 மாதங்கள் தென்மேற்கு பருவமழை பெய்தது. குறிப்பாக வட கர்நாடகம் மற்றும் கடலோர கர்நாடகம் ஆகிய பகுதிகளில் வரலாறு காணாத வகையில் கனமழை பெய்து பெரிய அளவில் வெள்ளம் ஏற்பட்டது. வட கர்நாடகத்தில் பாகல்கோட்டை, கலபுரகி, யாதகிரி, விஜயாப்புரா ஆகிய மாவட்டங்களில் ஓடும் பீமா மற்றும் கிருஷ்ணா ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளத்தில் சிக்கியதை அடுத்து அந்த ஆற்று படுகையில் அமைந்துள்ள கிராமங்களில் இருந்து சுமார் 45 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டனர்.

250-க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு 38 ஆயிரம் பேர் அதில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு தேவையான உணவு, உடை உள்ளிட்ட வசதிகளை அரசு செய்து கொடுத்தது. முதல்-மந்திரி எடியூரப்பா அந்த பகுதியில் ஹெலிகாப்டரில் பறந்து வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தார். வெள்ள பாதிப்புகளை மத்திய குழுவும் இங்கு வந்து நேரில் ஆய்வு செய்துவிட்டு சென்றது. இந்த மழை வெள்ளத்தால் ரூ.24 ஆயிரத்து 941 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், நிவாரண பணிகளை மேற்கொள்ள முதல்கட்டமாக ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்குமாறும் மத்திய அரசிடம் கர்நாடகம் வலியுறுத்தியது.

இயற்கை பேரிடர்

இந்த நிலையில் கர்நாடகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் ஏற்பட்ட இயற்கை பேரிடருக்கு நிவாரண நிதி வழங்குவது தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் உயர்மட்ட குழு ஆலோசனை கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் கர்நாடகம் உள்பட 6 மாநிலங்களுக்கு தேசிய இயற்கை பேரிடர் நிதியில் இருந்து நிதி ஒதுக்குவது என்று தீர்மானிக்கப்பட்டது. அதன்படி வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்ள கர்நாடகத்திற்கு முதல்கட்டமாக ரூ.577 நிதி ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்திற்கு ரூ.2,707 கோடி, ஒடிசாவுக்கு ரூ.128 கோடி, மத்திய பிரதேசத்திற்கு ரூ.611 கோடி, மராட்டியம், சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கும் நிவாரண நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம் ரூ.4,382 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கர்நாடகம் ரூ.10 ஆயிரம் கோடி கேட்ட நிலையில் மத்திய அரசு ரூ.577 கோடி நிதி ஒதுக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. 2-வது கட்டமாக வெள்ள நிவாரண பணிகளுக்கு நிதி உதவியை மத்திய அரசு வழங்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்