விண்கல் விழுந்ததால் உருவானதாக கூறப்படும் லோனார் ஏரி ‘ராம்சர்’ பட்டியலில் இடம்பெற்றது மந்திரி ஆதித்ய தாக்கரே தகவல்
மராட்டியத்தில் உள்ள லோனார் ஏரி ‘ராம்சர் பட்டியலில்’ இடம்பெற்றுள்ளதாக மந்திரி ஆதித்ய தாக்கரே தெரிவித்து உள்ளார்.
மும்பை,
உலகில் உள்ள சதுப்பு நிலங்களை பாதுகாக்கும் வகையில் கடந்த 1971-ம் ஆண்டு உலக நாடுகள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த நிகழ்வு ஈரான் நாட்டில் உள்ள ராம்சர் பகுதியில் நடந்தது. எனவே உலகில் உள்ள சதுப்பு நிலங்களை பாதுகாக்க தொடங்கப்பட்ட அமைப்புக்கு ‘ராம்சர்’ என பெயரிடப்பட்டது.
இந்த அமைப்பு மராட்டிய மாநிலம் புல்தானா மாவட்டத்தில் உள்ள லோனார் ஏரியை சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ‘ராம்சர் பட்டியலில்‘ கொண்டு வந்து உள்ளது. இந்த தகவலை மாநில சுற்றுச்சூழல் துறை மந்திரி ஆதித்ய தாக்கரே டுவிட்டரில் தெரிவித்து உள்ளார். மேலும் புகைப்பட கலைஞரான முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே எடுத்த லோனார் ஏரியின் புகைப்படங்களையும் பகிர்ந்து உள்ளார்.
நிறம் மாறிய ஏரி
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், லோனார் ஏரி தற்போது அதிகாரப்பூர்வமாக ராம்சர் பட்டியலில் இடம்பெற்று உள்ளதை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். முதல் முறையாக அதை 2004-ல் பார்த்தேன். இந்த ஏரி தற்போது உலக பல்லுயிர், புவியியல் மற்றும் சுற்றுலாவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குகிறது என்று தெரிவித்து உள்ளார்.
மும்பையில் இருந்து சுமார் 500 கி.மீ. தொலைவில் புல்தானா மாவட்டத்தில் லோனார் ஏரி அமைந்து உள்ளது. இந்த ஏரி கடந்த 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் விண்கல் விழுந்ததால் உருவானதாக நம்பப்படுகிறது. இந்த ஏரியின் நீர் சமீபத்தில் பச்சை நிறத்தில் இருந்து இளஞ்சிவப்பாக (பிங்க்) மாறி அனைவருக்கும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் அளித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.