தென்திருப்பேரை அருகே பலத்த மழையால் சாலையில் மரம் சரிந்து விழுந்தது போக்குவரத்து பாதிப்பு

தென்திருப்பேரை அருகே பலத்த மழையால் சாலையில் மரம் சரிந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.;

Update: 2020-11-13 18:29 GMT
தென்திருப்பேரை, 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களாக பரவலாக பெய்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, தென்திருப்பேரை, குரும்பூர், ஏரல், திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய பலத்த மழை பெய்தது. ஆறுமுகநேரி, காயல்பட்டினம், ஆத்தூர், உடன்குடி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று அதிகாலையில் மிதமான மழை பெய்தது.

காலையில் பெரும்பாலான இடங்களில் பலத்த மழை விட்டு விட்டு பெய்தது. சில இடங்களில் சாரல் மழை பெய்தது. பகல் முழுவதும் வானம் மேகமூட்டமாக இருந்தது.

சாலையில் சரிந்த மரம்

பலத்த மழையின் காரணமாக நேற்று காலை 8 மணி அளவில் தென்திருப்பேரை அருகே குருகாட்டூர் மெயின் ரோடு அருகில் நின்ற பழமைவாய்ந்த கொடுக்காப்புளி மரம் வேரோடு சரிந்து சாலையில் விழுந்தது. அப்போது அந்த வழியாக எந்த வாகனமும் செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் திருச்செந்தூர்-நெல்லை இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.

உடனே ஆழ்வார்திருநகரி போலீசார் மற்றும் பொதுமக்கள் இணைந்து, சாலையில் கிடந்த மரத்தை வெட்டி அகற்றினர். இதனால் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பலத்த மழையின் காரணமாக, ஸ்ரீவைகுண்டம் பகுதியிலும் பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.மழையின் காரணமாக, குரங்கணி முத்துமாலை அம்மன் கோவில் அருகில் குண்டும் குழியுமான சாலையில் குளம் போன்று தண்ணீர் தேங்கியது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பெரிதும் அவதி அடைந்தனர்.

மேலும் செய்திகள்