உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்துக்காக கணவருடன் சென்றபோது மரக்கிளை முறிந்து விழுந்து பெண் வேட்பாளர் சாவு
உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்துக்காக கணவருடன் சென்றபோது மரக்கிளை முறிந்து விழுந்து பெண் வேட்பாளர் உயிரிழந்தார்.;
பாலக்காடு,
கேரளாவில் அடுத்த மாதம்(டிசம்பர்) 8, 10, 14-ந் தேதிகளில் 3 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. தொடர்ந்து வருகிற 19-ந் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடக்கிறது. இதற்கிடையில் திருவனந்தபுரம் மாவட்டம் காரோடு கிராம பஞ்சாயத்தில் புதிய உச்சக்கடை வார்டில் போட்டியிட காங்கிரஸ் கட்சி சார்பில் கிரிஜாகுமாரி(வயது 48) என்பவர் தேர்வு செய்யப்பட்டு இருந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை 11.30 மணியளவில் தேர்தல் பிரசார பணிக்காக கிரிஜாகுமாரி தனது கணவர் பிந்துநாதனுடன் ஒரு மோட்டார் சைக்கிளில் வீட்டில் இருந்து புறப்பட்டார். மோட்டார் சைக்கிளை பிந்துநாதன் ஓட்டினார். சிறிது தூரம் சென்றவுடன் சாலையோரத்தில் உள்ள ஒரு மரத்தின் கிளை முறிந்து, மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து இருந்த கிரிஜாகுமாரி மீது விழுந்தது. இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனே அவரது கணவர் பிந்துநாதன் மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். தொடர்ந்து பலத்த காயம் அடைந்த தனது மனைவி கிரிஜாகுமாரியை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். ஆனால் செல்லும் வழியிலேயே கிரிஜாகுமாரி பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக பாரசாலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து பாரசாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்குவதற்கு முன்பே காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்ட பெண் எதிர்பாராதவிதமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.