10-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய சிறுவன் கைது
கோவையில் 10-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய சிறுவனை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது.
கோவை,
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் கோவை போத்தனூர் கோணவாய்க்கால்பாளையம் பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தான். இந்த நிலையில் அந்த சிறுவனுக்கும், அந்த பகுதியில் உள்ள 10-ம் வகுப்பு படித்து வந்த மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டது. மேலும், சிறுவன், அந்த மாணவியிடம் செல்போனில் பேசி வந்ததாக தெரிகிறது.
இதற்கிடையே, மாணவியின் பெற்றோர் அவளது படிப்பிற்காக தனி அறையும் ஏற்பாடு கொடுத்திருந்தனர். இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அந்த சிறுவன் மாணவியின் அறைக்குள் புகுந்து மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதில் சிறுமி கர்ப்பமானதாக தெரிகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மாணவியிடம் கேட்டபோது, அந்த பகுதியில் உள்ள சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக கூறி அழுதுள்ளார்.
இதையடுத்து அந்த சிறுமியை பெற்றோர் காட்பாடியில் உள்ள உறவினர் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அந்த சிறுவன் தொடர்ந்து மாணவிக்கு செல்போனில் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் கோவை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இந்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி 17 வயது சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைத்தனர்.