மூடப்பட்ட தொழிற்சாலையை மீண்டும் திறக்கக்கோரி சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் சாலை மறியல் - 110 பேர் கைது

மூடப்பட்ட தொழிற்சாலையை மீண்டும் திறக்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் 110 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2020-11-13 11:50 GMT
ஊட்டி,

ஊட்டி அருகே சாண்டிநல்லா பகுதியில் தனியார் தொழிற்சாலை செயல்பட்டு வந்தது. இந்த தொழிற்சாலையில் சுழற்சி முறையில் தொழிலாளர்கள் 300 பேர் பணிபுரிந்து வந்தனர். இதற்கிடையே கடந்த 2018-ம் ஆண்டு தொழிற்சாலை மூடப்பட்டு, தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டனர். 2 ஆண்டுகளை கடந்தும் இதுவரை திறக்கப்படவில்லை.

இந்த நிலையில் நேற்று சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சார்பில் மூடப்பட்ட தனியார் தொழிற்சாலையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தொழிலாளர்களுக்கு முழுமையான ஊதியம் வழங்க வேண்டும் ஆகிய 2 கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு சி.ஐ.டி.யு. நிர்வாகி ராஜரத்தினம் தலைமை தாங்கினார். ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலை சாண்டிநல்லாவில் சாலையில் அமர்ந்து தொழிலாளர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

தொழிற்சாலையில் பணிபுரிந்த ஒரு பகுதி ஊழியர்களுக்கு முழுமையான ஊதியத்தையும், மற்றொரு பகுதி ஊழியர்களுக்கு 50 சதவீத ஊதியத்தையும் நிர்வாகம் வழங்கி வருகிறது.

இதுகுறித்து கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது. தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்களின் குடும்பத்தினர் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தற்போது வேலையில்லாமல் திண்டாடி வருகின்றனர். எனவே தொழிற்சாலையை உடனடியாக திறக்க வேண்டும். அதுவரை தொழிலாளர்களுக்கு முழுமையான ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பி வலியுறுத்தினர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து புதுமந்து போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட 10 பெண்கள் உள்பட 110 பேரை கைது செய்து அருகே உள்ள சமுதாய கூடத்துக்கு அழைத்து சென்றனர். அதன் பின்னர் போக்குவரத்து சீரானது.

மேலும் செய்திகள்