தீபாவளி பண்டிகையையொட்டி புத்தாடைகள் வாங்க ஜவுளி கடைகளில் குவிந்த மக்கள்
தீபாவளி பண்டிகையை ஒட்டி திருப்பூரில் புத்தாடைகள் வாங்க ஜவுளி கடைகளில் கூட்டம் அதிகமாக இருந்தது.
திருப்பூர்,
தீபாவளி பண்டிகை என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடை அணிந்து கொண்டாடி மகிழ்கின்றனர். திருப்பூரில் உள்ள ஜவுளி கடைகளில் புத்தாடைகளை வாங்க மக்கள் கூட்டம் கடந்த ஒருவாரமாக அலைமோதுகிறது. நாளை (சனிக்கிழமை) தீபாவளி பண்டிகையை கொண்டாட உள்ள நிலையில் நேற்று திருப்பூர் மாநகரில் உள்ள ஜவுளிக் கடைகளில் கூட்டம் அதிகமாக இருந்தது. குடும்பம் குடும்பமாக வந்து புத்தாடைகள் வாங்கி மகிழ்ந்தனர்.
கொரோனா ஊரடங்கால் வேலை இழப்பு காரணமாகவும், பெரும்பாலான நிறுவனங்களில் போனஸ் பட்டுவாடா குறைவாக இருந்தது காரணமாகும், பண நெருக்கடியில் மக்கள் சிக்கித் தவித்தனர். இருப்பினும் வீட்டில் உள்ள குழந்தைகள், சிறுவர்களுக்கு புத்தாடைகள் வாங்கி கொடுக்க வேண்டும் என்று பெற்றோர் பலர் ஜவுளி கடைகளுக்கு வந்து ஆடைகளை வாங்கி சென்றதை காண முடிந்தது.
திருப்பூர் குமரன் ரோட்டில் உள்ள ஜவுளி கடைகளில் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் நேற்று ரோட்டில் வாகன நெரிசல் அதிகமாக இருந்தது. போக்குவரத்து போலீசார் இரும்பு தடுப்புகளை அமைத்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். இதுபோல் பழைய பஸ் நிலையம், அவினாசி ரோடு பகுதிகளிலும் உள்ள ஜவுளி கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
காதர்பேட்டையில் உள்ள பனியன் கடைகளில் மக்கள் அதிக அளவு திரண்டனர். நஞ்சப்பா பள்ளி ரோட்டில் இருபுறமும் தற்காலிக கடைகள் அமைத்து விற்பனை ஜோராக நடைபெற்றது. பண நெருக்கடியில் சிக்கித் தவித்த மக்கள் புத்தாடைகளை வாங்குவதற்கு பொருளாதார நிலைக்கு ஏற்ப பனியன் ஆடைகளை அதிகம் வாங்கி சென்றனர்.