ரூ.84¼ லட்சம் மோசடி: ஏலச்சீட்டு நிறுவன உரிமையாளர் கைது

திருப்பூரில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.84 லட்சத்து 33 ஆயிரத்தை மோசடி செய்தவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2020-11-13 06:30 GMT
திருப்பூர்,

திருப்பூர் ராக்கியாபாளையம் பகுதியை சேர்ந்தவர் இதயச்சந்திரன். பனியன் நிறுவன உரிமையாளர். இவர் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனரிடம் குறை தீர்ப்பு நாளில் புகார் மனு கொடுத்தார்.

அதில் மண்ணரை சத்யா காலனியை சேர்ந்த ராஜ்குமார் (வயது 40) என்பவர் அரசு அனுமதி பெறாமல் ஏலச்சீட்டு நடத்தி வந்ததாகவும், அதில் தான் ரூ.45 லட்சம் கட்டி இருந்ததாகவும், மேலும் ஊத்துக்குளி ரோடு, மண்ணரை பகுதியை சேர்ந்தவர்களும் பலரும் ஏலச்சீட்டு பணம் கட்டி வந்துள்ளனர்.

ரூ.84 லட்சத்து 33 ஆயிரத்தை ராஜ்குமார் வசூல் செய்து திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி விட்டதாகவும் கூறியிருந்தார்.

இதைத்தொடர்ந்து திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவுப்படி துணை கமிஷனர் சுரேஷ்குமார் மேற்பார்வையில் ராஜ்குமார் மீது திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசில் மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பின்னர் மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் பாலமுருகன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் கந்தசாமி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் அப்பாக்குட்டி, போலீசார் வினோஆனந்த், கருணாசாகர் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்றுகாலை மண்ணரை பஸ் நிறுத்தம் அருகே ராஜ்குமாரை தனிப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட தனிப்படையினரை போலீஸ் கமிஷனர் பாராட்டினார்.

மேலும் செய்திகள்