நெல்லிக்குப்பம் அருகே, வீட்டின் கதவை உடைத்து 8½ பவுன் நகை கொள்ளை - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
நெல்லிக்குப்பம் அருகே வீட்டின் கதவை உடைத்து 8½ பவுன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
நெல்லிக்குப்பம்,
நெல்லிக்குப்பம் அடுத்த டி.குமராபுரத்தை சேர்ந்தவர் வேதங்கிரி (வயது 53). இவர் கடலூரில் பேட்டரி கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் தனது வீட்டை பூட்டி விட்டு வேதங்கிரி கடைக்கு சென்றார். இரவு வியாபாரம் முடிந்ததும் கடையை மூடிவிட்டு வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். அப்போதுஅங்கு வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த துணிகள் சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த 8½ பவுன் நகை, 400 கிராம் வெள்ளி பொருட்கள், 3 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை காணவில்லை. அதனை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. இது குறித்த தகவலின் பேரில்பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு பாபு பிரசாத் தலைமையில் இன்ஸ்பெக்டர் வீரமணி, சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரசன்னா, தவச்செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் மோப்ப நாய் அர்ஜூன் வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த இடத்தில் இருந்து மோப்பம் பிடித்தப்படி சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. தொடர்ந்து தடயவியல் நிபுணர்கள் வந்து கொள்ளை நடந்த வீட்டில் கிடைத்த தடயங்களை சேகரித்து சென்றனர்.
கொள்ளை போன நகை, பணத்தின் மொத்த மதிப்பு ரூ.3½ லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை கொள்ளை யடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். கடந்த 15 நாட்களுக்கு முன்பு நெல்லிக்குப்பம் ஆஞ்சநேயர் கோவில் மற்றும் இரும்பு கடைக்குள் மர்மநபர்கள் புகுந்து கொள்ளையடித்து சென்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் நெல்லிக்குப்பம் கடைத்தெருவில் 3 கடைகளில் மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். நெல்லிக்குப்பம் பகுதியில் அடுத்தடுத்து கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருவதால் பொதுமக்கள், வியாபாரிகள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர்.