மாவட்டத்தில் நெல் சாகுபடி தொடக்கம் - உரம் கையிருப்பு இருப்பதாக வேளாண் துறையினர் தகவல்
ராமநாதபுரம் மாவட்டத்தில் 1¼ ஹெக்டேரில் நெல் சாகுபடி தொடங்கி உள்ளது. விவசாயிகளுக்கு தேவையான உரம் கையிருப்பு இருப்பதாக வேளாண் துறையினர் தகவல் தெரிவித்து உள்ளனர். இது குறித்து ராமநாதபுரம் வேளாண்மை இணை இயக்குனர் குணபாலன் கூறியதாவது:-;
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் 1 லட்சத்து 20 ஆயிரத்து 500 ஹெக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு விவசாயப்பணிகள் நடைபெற்று வருகிறது. திருவெற்றியூர் உள்பட பல பகுதியில் விவசாயிகள் தாங்கள் பயிரிட்ட நெற்பயிருக்கு களை எடுக்கும் பணிகளை மேற்கொண்டு உள்ளனர். தற்சமயம் மழை பெய்து வருவதால் விவசாயிகள் முதல் முறை களை எடுத்த பின்பு மேலுரமாக தழைச்சத்து உரங்களை இட வேண்டும். தழைச்சத்து தரக்கூடிய உரங்களான டி.ஏ.பி, என்.பி.கே காம்ப்ளக்ஸ், அம்மோனியம் குளோரைடு, அம்மோனியம் சல்பேட் ஆகிய உரங்களை பயன்படுத்தலாம்.
தழைச்சத்து உரம் யூரியா அல்லாமல் மேற்கண்ட பிற உரங்களாகவும் பயிருக்கு இடலாம். டி.ஏ.பி உரத்தில் தழைச்சத்து 18 சதவீதமும், என்.பி.கே.காம்ப்ளக்ஸ்-ல் 20 சதவீதமும், அம்மோனியம் குளோரைடு-ல் 25 சதவீதமும், அம்மோனியம் சல்பேட்-ல் 21 சதவீதமும் உள்ளது. யூரியா உரம் தனியார் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் போதுமான இருப்பு உள்ளது.
நவம்பர் மாத உரத்தேவையான 5 ஆயிரம் டன்னுடன் கூடுதலாக 1,500 டன் வேளாண்மை இயக்குனரகத்தில் கோரப்பட்டு 6 ஆயிரத்து 500 டன் ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. இதில் 716 டன் யூரியா வரப்பெற்றுள்ளது.மதுரையில் இருந்து மேலும், 500 டன் யூரியா சரக்கு ரெயில் மூலம் வரப்பெற்றுள்ளது. மாவட்ட நிர்வாகம் விவசாயத்துக்கு தேவையான உரங்களை தட்டுப்பாடின்றி விவசாயிகளுக்கு வழங்குவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது.
தற்சமயம் யூரியா 3 ஆயிரத்து 490 டன், டி.ஏ.பி ஆயிரத்து 77 டன், காம்ப்ளக்ஸ் 2 ஆயிரத்து 470 டன், பொட்டாஷ் 313 டன் இருப்பில் உள்ளது.இம்மாத உரத்தேவையான 5 ஆயிரம் டன்னுடன் கூடுதலாக ஆயிரத்து 500 டன் வேளாண்மை இயக்குனரகத்தில் கோரப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் உரப்பற்றாக்குறை பற்றிய கவலைகொள்ள தேவையில்லை.
தனியார் உர நிலையங்கள் செயற்கை உரத்தட்டுப்பாட்டை ஏற்படுத்தாமல் விவசாயிகளுக்கு ஆதார் அட்டை மூலம் எந்திரத்தில் பட்டியலிட்டு கொடுக்க வேண்டும். விவசாயிகள் அல்லாத பிற நபர்களின் ஆதார் எண்ணை பயன்படுத்தக் கூடாது.இதை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் உள்ள தனியார் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உரக்கடைகளில் உர விற்பனையை வட்டார அளவிலான கண்காணிப்பு குழுக்கள் அமைத்து கண்காணித்து வரப்படுகிறது. ஏப்ரல் மாதம் முதல் அக்டோபர் வரை 6 ஆயிரத்து 143 டன் யூரியா விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
நெற்பயிரில் வெளிறிய இலைகள் தென்பட்டால் ஏக்கருக்கு துத்தநாக சல்பேட் 10 கிலோவும், நெல் நுண்ணூட்டம் 5 கிலோவும் இடுவதன் மூலம் நுண்ணூட்ட சத்து குறைபாட்டினை நீக்கலாம்.
எனவே, விவசாயிகள் யூரியா மட்டும் அல்லாது பிற உரங்களான டி.ஏ.பி, காம்ப்ளக்ஸ், அம்மோனியம் குளோரைடு, அம்மோனியம் சல்பேட் ஆகிய தழைச்சத்து தரக்கூடிய உரங்களையும் இட்டு பயிர் வளர்ச்சியினை ஊக்குவிக்கலாம்.விவசாயிகள் மண் வள அட்டையை பயன்படுத்தி சமச்சீர் உரமிட்டு வளமான பயிரையும் பூச்சி நோய் இல்லாத பருவ சூழலையும் உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.