பொருட்கள் வாங்குவதற்காக வந்தவர்களால் திணறியது: வாகன ஊர்வலம் போல் காட்சி அளித்த திருச்சி சாலைகள் - பஸ்களில் பயணிகள் கூட்டம் இல்லை
தீபாவளிக்கு பொருட்கள் வாங்குவதற்காக வந்தவர்களால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் திருச்சி சாலைகள் வாகன ஊர்வலம் நடந்தது போல் காட்சி அளித்தன.
திருச்சி,
நாளை தீபாவளி பண்டிகை. தீபாவளியை கொண்டாடுவதற்காக புத்தாடைகள், வீட்டு உபயோக பொருட்கள், நகைகள் மற்றும் இனிப்புகள், பட்டாசுகள் வாங்குவதற்காக திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் சுற்று வட்டார மாவட்டங்களில் உள்ள மக்கள் திருச்சி நோக்கி படையெடுக்கத் தொடங்கி விட்டனர். இதன் காரணமாக திருச்சி என்.எஸ்.பி. சாலை, பெரியகடை வீதி, சிங்காரத்தோப்பு, சூப்பர் பஜார், மேல அரண்சாலை ஆகிய இடங்கள் நேற்று மக்கள் கூட்டத்தால் திணறியது.
கடைவீதியில் பொருட்கள் வாங்குவதற்காக வந்தவர்களின் கார்கள், ஆட்டோக்கள், வேன்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு மாநகர காவல்துறை சார்பில் தனித்தனி இடங்கள் ஒதுக்கப்பட்டு இருந்தது. அந்த இடங்களில் வாகனங்கள் நிறுத்தப்பட்டன.
ஆனால் திருச்சி நகருக்குள் உள்ளவர்கள் தங்களது சொந்த உபயோக கார்கள் மற்றும் வாகனங்களில் தீபாவளி பொருட்கள் வாங்குவதற்காக வெளியே வந்ததால் திருச்சி நகரில் நேற்று அனைத்து சாலைகளிலும் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. திருச்சி ஜங்ஷனில் இருந்து பாலக்கரை வழியாக மெயின் கார்டு கேட் செல்லும் சாலை, குட்செட் மேம்பால சாலை, டி.வி.எஸ். டோல்கேட், உறையூர் மெயின் ரோடு, தில்லை நகர் மெயின் ரோடு, சாஸ்திரி ரோடு, கல்லூரி சாலை, மாம்பழச்சாலை, அண்ணா சிலை, கோட்டை ஸ்டேஷன் ரோடு ஆகிய பகுதிகளில் கார்கள் மற்றும் வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக நின்று கொண்டிருந்ததால் வாகன ஊர்வலம் நடந்தது போன்று காட்சியளித்தது.
இந்த நெருக்கடியில் சிக்கிய வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஊர்ந்து தான் செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டது. காலை 11 மணியிலிருந்து மதியம் 2 மணி வரை இந்த நிலை நீடித்தது. போக்குவரத்தை ஒழுங்குபடுத்த கூடிய போலீசாரால் அதனை கட்டுப்படுத்த முடியவில்லை.
அதே நேரத்தில் திருச்சி மத்திய பஸ் நிலையம் நேற்று வெறிச்சோடி காணப்பட்டது. தீபாவளிக்காக வில்லியம் சாலையில் சோனா மீனா தியேட்டர் எதிர்புறம், மன்னார் புறத்தில் இரண்டு இடங்கள் என 3 தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டதால் பயணிகளை ஏற்றிக்கொண்டு பஸ்கள் இந்த இடங்களில் இருந்து புறப்பட்டன. இந்த இடங்களில் இருந்து மத்திய பஸ் நிலையத்திற்கு டவுன் பஸ்கள் வந்தன.
மத்திய பஸ் நிலையத்தில் இருந்து சென்னை மற்றும் கரூர், நாமக்கல் மார்க்கத்தில் செல்லும் பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. இதன் காரணமாக மத்திய பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் மிகவும் குறைவாக இருந்தது. சென்னை செல்லும் பஸ்களிலும் பயணிகள் மிகக் குறைவான அளவிலேயே இருந்தனர். அதே நேரத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்ட பஸ்கள் அதிக அளவில் பயணிகளை ஏற்றி கொண்டு கிளம்பின என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபோல் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் நேற்று பயணிகள் கூட்டம் அதிக அளவில் இல்லை. மதுரையில் இருந்து சென்னை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் 9.15 மணிக்கு திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்திற்கு வந்தது. அப்போது அந்த ரெயிலில் ஏறி சென்னை செல்வதற்காக காத்திருந்த பயணிகள் போட்டி போட்டுக் கொண்டு வந்து ஏறினார்கள். திருச்சியில் இறங்கவேண்டிய பயணிகளும் இறங்கினார்கள். அந்த ரெயில் சென்ற பின்னர் ஜங்ஷன் ரெயில் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. அதன் பிறகு ஜன சதாப்தி எக்ஸ்பிரஸ் வந்தபோது ஓரளவு பயணிகள் கூட்டம் இருந்தது.
இதுபோல், மண்ணச்சநல்லூர், சமயபுரம் கடை வீதியில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காகவும், சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக பட்டாசு மற்றும் வெடிபொருட்களை வாங்குவதற்கும் ஏராளமானோர் நேற்று மாலை கடைகளுக்கு வந்தனர். இதன் காரணமாக மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.