குளித்தலை, உப்பிடமங்கலம் பகுதிகளில் வெவ்வேறு விபத்தில் பெண் உள்பட 2 பேர் பலி
குளித்தலை, உப்பிடமங்கலம் பகுதிகளில் வெவ்வேறு விபத்தில் பெண் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
குளித்தலை,
திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே உள்ள ஸ்ரீராமசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 61). இவர் தீபாவளிக்கு புதுத்துணிகள் வாங்குவதற்காக திருச்சிக்கு மோட்டார் சைக்கிளில் தனது மனைவி பவானியை (56) அழைத்து கொண்டு நேற்று முன்தினம் சென்றுள்ளார். பின்னர் புதுத்துணிகளை வாங்கி விட்டு மீண்டும் அதே மோட்டார் சைக்கிளில் திருச்சி- கரூர் புறவழி தேசிய நெடுஞ்சாலையில் குளித்தலை வழியாக ஊருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். குளித்தலை அருகே உள்ள மனதட்டை பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, அதே சாலையில் பின்னால் வந்த லாரி மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட பவானி படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ரமேஷ் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதையடுத்து மனைவியின் உடலை பார்த்து ரமேஷ் கதறி அழுதது அங்கிருந்தவர்களின் கண்களை குளமாக்கியது. இதையடுத்து காயமடைந்த ரமேசை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த குளித்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, பவானியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் திருச்சி-கரூர் சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உப்பிடமங்கலம் அருகே உள்ள கருப்பம்பாளையத்தை சேர்ந்தவர் காளியப்பன் (65) விவசாயி.
இவர் நேற்று மதியம் தனது சொந்த வேலை காரணமாக மோட்டார் சைக்கிளில் கரூர் சென்றுவிட்டு, பின்னர் வீட்டுக்கு திரும்பி சென்றுகொண்டிருந்தார். அப்போது ஏமூர்புதூர் பிரிவு பகுதியில் கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற காளியப்பன் மோட்டார் சைக்கிள் மீது கோயபுத்தூரிலிருந்து திருச்சி நோக்கி சென்ற கார் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிளிலிருந்து தூக்கி வீசப்பட்ட காளியப்பன் படுகாயமடைந்து உயிருக்கு போராடினார். இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் காளியப்பனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து வெள்ளியணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.