கடம்பூர்-கங்கைகொண்டான் இரட்டை ரெயில் பாதையில் அதிவிரைவாக ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம்
கடம்பூர்-கங்கைகொண்டான் இடையே இரட்டை ரெயில் பாதையில் அதிவிரைவாக ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம் நேற்று நடத்தப்பட்டது.
தென்காசி,
தமிழகம் முழுவதும் இரட்டை ரெயில் பாதை திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. மதுரை ரெயில்வே கோட்டம் சார்பில், மதுரையில் இருந்து நாகர்கோவில் வரையிலும் இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணிகள் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் கடம்பூர் முதல் கங்கைகொண்டான் வரையிலும் சுமார் 25 கிலோ மீட்டர் தூரத்துக்கு இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணிகள் நிறைவடைந்து உள்ளது. இந்த வழித்தடத்தில் ரெயில் இயக்கி சோதனை நடத்தப்பட்டது.
தொடர்ந்து கடம்பூர்-கங்கைகொண்டான் இடையே இரட்டை ரெயில் பாதையில் அதிவிரைவாக ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம் நேற்று நடந்தது. இதற்காக பெங்களூருவில் இருந்து ரெயில்வே தென் மண்டல பாதுகாப்பு ஆணையாளர் அபய்காந்த் ராய் தலைமையிலான குழுவினர் சிறப்பு ரெயிலில் கடம்பூர் ரெயில் நிலையத்துக்கு நேற்று காலையில் வந்தனர். மதுரை கோட்ட மேலாளர் லெனின், இரட்டை ரெயில் பாதை திட்ட மேலாளர் கமலாக்க ரெட்டி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
110 கி.மீ. வேகத்தில் ரெயில் இயக்கம்
தொடர்ந்து கடம்பூரில் இருந்து கங்கைகொண்டான் வரையிலும் ரெயிலை அதிவிரைவாக இயக்கி ஆய்வு செய்தனர். சுமார் 110 கிலோ மீட்டர் வேகம் வரையிலும் ரெயிலை அதி விரைவாக இயக்கி சோதனை நடத்தினர். அப்போது தண்டவாளத்தில் ஏற்படும் அதிர்வுகளை கண்காணித்தனர். பின்னர் கங்கைகொண்டான் ரெயில் நிலையத்திலும் ஆய்வு செய்தனர்.
அதன்பிறகு நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு வந்த ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய்காந்த் ராய் தலைமையிலான குழுவினர் அங்கும் ஆய்வு மேற்கொண்டனர்.
தொடர்ந்து மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் லெனின் நிருபர்களிடம் கூறியதாவது:-
அடுத்த ஆண்டு பணிகள் நிறைவு
புதிதாக அமைக்கப்பட்ட கடம்பூர்-கங்கைகொண்டான் இடையிலான இரட்டை ரெயில் பாதையில் ரெயில்வே பாதுகாப்பு ஆணையாளர் தலைமையில், அதி விரைவாக ரெயிலை இயக்கி ஆய்வு செய்தோம். தற்போது இதில் 60 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படும் ரெயிலை 110 கி.மீ. வேகத்தில் இயக்கலாமா? என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
மதுரை-நாகர்கோவில் இடையிலான இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணிகள் அடுத்த ஆண்டு (2021) டிசம்பர் மாதத்துக்குள் நிறைவடையும். நெல்லை-திருச்செந்தூர் இடையே ரெயில் பாதையை மின்மயமாக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நெல்லை ரெயில்வே மேலாளர் முருகேசன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.