நெல்லையில் இடி-மின்னலுடன் பலத்த மழை சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது
நெல்லையில் நேற்று இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
நெல்லை,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. நெல்லை மாவட்டத்தில் பரவலாக மிதமான மழை பெய்தது. இதனால் தாமிரபரணி ஆற்றுப்பாசன பகுதிகளில் நெல் நடவு செய்யும் பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டனர். மானாவாரி விவசாயிகள் போதிய பருவமழை பெய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பில் இருந்தனர்.
இந்த நிலையில் வளிமண்டலத்தில் ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி, நெல்லையில் நேற்று அதிகாலையில் லேசான மழை பெய்தது. தொடர்ந்து பகலில் வானம் மேகமூட்டமாக இருந்தது. மதியம் 1 மணி அளவில் நெல்லையில் கருமேகங்கள் சூழ்ந்து இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்ய தொடங்கியது. விட்டுவிட்டு பெய்த மழை மதியம் 3 மணிக்கு பிறகு இடைவிடாத மழையாக கொட்டியது. சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த மழையால் சாலைகள், தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தொடர்ந்து மாலை வரையிலும் விட்டு விட்டு மழை பெய்தது.
குளம் போல் தேங்கிய தண்ணீர்
பலத்த மழையின் காரணமாக பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானம், அண்ணா விளையாட்டு அரங்கம் மற்றும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் குளம் போன்று தேங்கியது. நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தை சுற்றியுள்ள பகுதியிலும் தண்ணீர் தேங்கியது. சமாதானபுரம் போலீஸ் கட்டுப்பாட்டு அறை அருகிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. அதில் வாகனங்கள் சிரமப்பட்டு ஊர்ந்து சென்றன. நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்திலும் மழைநீர் தேங்கியது.
மாநகர பகுதிகளில் பாதாள சாக்கடை மற்றும் கூட்டு குடிநீர் திட்ட குழாய்கள் பதிக்கும் பணிக்காக தோண்டப்பட்டு மண் சாலையாக இருப்பதால், அவை சேறும் சகதியுமாக காட்சி அளித்தது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமம் அடைந்தனர்.
நெல்லை டவுன் ரத வீதிகள், சொக்கப்பனை முக்கு, ஆர்ச், சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலம், வண்ணார்பேட்டை ரவுண்டானா, முருகன்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இதேபோல் நெல்லை புறநகர் மாவட்டம் மற்றும் தென்காசி மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது.