சென்னையில், இடைவிடாது பெய்த மழை கடும் போக்குவரத்து நெரிசல்; வாகன ஓட்டிகள் அவதி
சென்னையில் நேற்று காலை முதல் இரவு வரை இடைவிடாது மழை கொட்டி தீர்த்தது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
சென்னை,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. அதேபோல், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் கடந்த 2 வாரமாக ஆங்காங்கே மழை பெய்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் வங்கக்கடலில் நிலவும் தாழ்வுபகுதி காரணமாக நேற்று முன்தினம் முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்து இருந்தது.
அதன்படி, சென்னையில் நேற்று முன்தினம் காலையில் இருந்து கருமேகங்கள் சூழ்ந்து விட்டுவிட்டு மிதமான மழை பெய்து, மாலையில் சில இடங்களில் வெளுத்து வாங்கியது. இதன் தொடர்ச்சியாக நேற்றும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்தது.
சென்னையில் பரவலாக மழை
சென்னையை பொறுத்தவரையில் காலை 6.30 மணிக்கு சாரல் மழை பெய்யத்தொடங்கியது. அதன்பிறகு வேகம் சற்று அதிகரித்து விட்டுவிட்டு மழை கொட்டியது. காலை 7 மணி முதல் 10 மணி வரை சென்னையில் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது. பின்னர் மதியம் மழை ஓய்ந்தது போல தோன்றினாலும் தூறல் நின்றபாடில்லை.
இந்தநிலையில் மாலையில் மீண்டும் லேசான மழை பெய்தது. நேரம் செல்ல செல்ல மழையின் தீவிரம் அதிகரித்தது. இரவு 8 மணிக்கு பிறகு மழை இன்னும் வேகமெடுத்தது. அந்தவகையில் நேற்று காலை முதல் இரவு வரை இடைவிடாது மழை கொட்டி தீர்த்தது. நேற்று இரவு 10 மணி தாண்டியும் மழை ஓயவில்லை.
வீடுகளில் முடங்கிய மக்கள்
அந்தவகையில் எழும்பூர், ராயப்பேட்டை, ஆழ்வார்ப்பேட்டை, வில்லிவாக்கம், அண்ணாநகர், அயனாவரம், கிண்டி, சைதாப்பேட்டை, பல்லாவரம், குரோம்பேட்டை உள்பட சென்னையில் அனேக இடங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. காலை முதல் பெய்யும் மழையால் சென்னையில் தாழ்வான பகுதிகள் மற்றும் சாலை ஓரங்களில் மழை நீர் தேங்கியது. அதனை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வந்ததையும் பார்க்க முடிந்தது.
காலை நேரம் அலுவலகத்துக்கு செல்லும் நேரத்தில் பெய்த மழையால் பலர் தங்களுடைய வாகனத்தில் ‘ரெயின்கோட்’ அணிந்தபடியும், வாகனத்தின் முகப்பு விளக்கை எரியவிட்டபடியும் சென்றனர். இரவு பணி முடிந்து வீடு திரும்பும்போதும் ரெயின்கோட் அணிந்தபடியே சென்றனர். இடைவிடாது பெய்யும் மழை காரணமாக நகரின் பெரும்பாலான பகுதி நேற்று குளிர்ச்சியாகவே காணப்பட்டது. கொட்டும் மழையால் மக்களும் வீடுகளிலேயே முடங்கினர்.
கடும் போக்குவரத்து நெரிசல்
தீபாவளி பண்டிகை நாளை (சனிக்கிழமை) கொண்டாடப்பட உள்ள நிலையில், ஜவுளி உள்பட பல்வேறு பொருட்களை வாங்குவதற்கு திட்டமிட்டு இருந்த மக்கள் நேற்று முழுவதும் கடைவீதிகளில் சுற்றி கொண்டிருந்தனர். இதனால் தியாகராயநகர், வண்ணாரப்பேட்டை, பாரிமுனை, புரசைவாக்கம், அண்ணாநகர், வியாசர்பாடி உள்பட கடைவீதிகளில் மக்கள் கூட்டம் காணப்பட்டது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மக்கள் தீபாவளி பண்டிகை பொருட்கள் வாங்க ஆர்வம் காட்டினர்.
இதனால் நேற்று நகரின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. அண்ணாசாலை, பீட்டர்ஸ் சாலை, மெரினா காமராஜர் சாலை, சர்தார் வல்லபாய் சாலை, ஸ்டெர்லிங் சாலை, எம்.சி.சாலை என நகரின் முக்கிய சாலைகளில் மழைநீர் குளம்போல தேங்கியது. தேங்கிய மழைநீரில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. பல இடங்களில் நீண்ட நேரமாகியும் நகர கூட முடியாத நிலையில் வாகனங்கள் நெரிசலுடன் சாலையை ஆக்கிரமித்திருந்தன. கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளானார்கள்.
தாம்பரத்திலும்போக்குவரத்து நெரிசல்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து விக்கிரவாண்டி, விழுப்புரம் வழியாக மன்னார்குடி, பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், கும்பகோணம் பகுதிகளுக்கு செல்லும் சிறப்பு பஸ்கள் தாம்பரம் சானடோரியத்தில் உள்ள அறிஞர் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்தும், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மாவட்டங்களுக்கு தாம்பரம் ரெயில் நிலையம் அருகில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
இதனால் ஒரே நேரத்தில் அதிகளவு சிறப்பு பஸ்கள் தாம்பரம் நகருக்குள் வரவழைக்கப்பட்டு சாலையோரம் நிறுத்தப்பட்டதால் தாம்பரம் ரெயில் நிலையம், முடிச்சூர் சாலை மேம்பாலம், காந்தி சாலை சந்திப்பு, போக்குவரத்து பணிமனை சிக்னல், தாம்பரம் சானடோரியம் மெப்ஸ் சிக்னல் பகுதி உள்பட தாம்பரம் நகர் முழுவதும் பல மணிநேரம் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
இன்றும் மழைக்கு வாய்ப்பு
இந்தநிலையில் இன்றும் (வெள்ளிக்கிழமை) சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடைவெளி விட்டு மிதமான மழையும், அவ்வப்போது கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேவேளை தீபாவளிக்கு முந்தைய தினமான இன்று விரும்பிய பொருட்களை வாங்க மக்கள் ஆர்வம் காட்டுவார்கள். எனவே பொருட்களை வாங்க வேண்டுமே என்ற ஆவலில் மக்களும், பொருட்களை விற்க வேண்டுமே என்ற எதிர்பார்ப்பில் வியாபாரிகளும் ‘ஒருநாள் மட்டும் மழை பெய்யக்கூடாது’, என மானசீகமாக வருண பகவானை வேண்டி வருகின்றனர்.