அனைவரது ஒத்துழைப்பால் கொரோனாவை வெல்ல முடிந்தது சுகாதாரத்துறை இயக்குனர் பெருமிதம்

அனைவரது ஒத்துழைப்பாலும் கொரோனாவை வெல்ல முடிந்தது என்று சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் தெரிவித்தார்.;

Update: 2020-11-12 22:46 GMT
பாகூர், 

கிருமாம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு ‘முன்கள போராளிகள்’ விருது வழங்கி கவுரவிக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு குருகுல் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி மோகன் வரவேற்றார். பொருளாளர் பிருந்தா தலைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினராக சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் மோகன்குமார், பாகூர் தாசில்தார் குமரன், துணை தாசில்தார் விமல் ஆகியோர் கலந்து கொண்டு கிருமாம்பாக்கம் பகுதியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் ஊழியர்களை பாராட்டி முன்கள போராளிகள் விருதுகளை வழங்கி பாராட்டினர்.

இறப்பு விகிதம் குறைவு

அதனைதொடர்ந்து இயக்குனர் மோகன்குமார் பேசுகையில், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட சுகாதாரத்துறை மற்றும் பிற துறை ஊழியர்களுடன் இணைந்து பணியாற்றிய தனியார் மருத்துவ கல்லூரிகள், தொண்டு நிறுவனங்கள், மகளிர் குழுக்கள், தன்னார்வலர்களும் பாராடப்பட வேண்டியவர்கள் தான். அனைவரது ஒத்துழைப்பு காரணமாகத் தான் கொரோனாவை நாம் வெல்ல முடிந்தது. தற்போது புதுச்சேரியில் 100 பேரில் 1.6 என்ற விகிதத்தில் இறப்பு விகிதம் உள்ளது. உலக அளவில் இது 3 சதவீதமாகும் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் குருகுல் கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள், டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். கிருமாம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலைய அதிகாரி டாக்டர் நாராயணன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்