தீபாவளி போனஸ் வழங்கக்கோரி அங்கன்வாடி ஊழியர்கள் சாலை மறியல்
தீபாவளி போனஸ் வழங்கக்கோரி அங்கன்வாடி ஊழியர்கள் சாலை மறியல் 200 பேர் கைது.
புதுச்சேரி,
புதுவை சாரத்தில் உள்ள மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இயக்குனர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் நிலுவையில் உள்ள 2 ஆண்டு தீபாவளி போனஸ் மற்றும் இந்த ஆண்டுக்கான போனஸ் வழங்க வலியுறுத்தி 4-வது நாளாக நேற்று தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு அங்கன்வாடி ஊழியர்கள் சங்க தலைவர் ராஜலட்சுமி தலைமை தாங்கினார். இதில் செயலாளர் தாட்சாயிணி, பொருளாளர் முருகவேணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
அவர்கள் நேற்று மாலை தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக துறையின் செயலாளரை சந்தித்து பேசினர். அப்போது அவர் இன்று (வெள்ளிக்கிழமை) பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார். ஆனால் ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்து துறையின் அலுவலகத்திற்கு சென்றனர். இதற்குள் அங்கு இருந்த ஊழியர்கள் அலுவலக நுழைவு வாயிலை மூடிவிட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த அங்கன்வாடி ஊழியர்கள் சாரம் அவ்வைத்திடல் பகுதியில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
இது பற்றி தகவல் அறிந்த கோரிமேடு போலீசார் அங்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்ட ஊழியர்களை கைது செய்து அப்புறப்படுத்தினர்.