கர்நாடகத்தில் 60 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு 2-ம் நிலை நகரங்களில் மென்பொருள் நிறுவனங்கள் தொடங்கப்படும்
கர்நாடகத்தில் 2-ம் நிலை நகரங்களில் மென்பொருள் நிறுவனங்கள் தொடங்கப்படும் என்றும், 60 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என்றும் தகவல் தொழில்நுட்ப கொள்கையை வெளியிட்டு துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் கூறினார்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் உயிரி தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்திற்கு ஒரு தொழில் கொள்கையை உருவாக்கி தற்போது வெளியிட்டுள்ளோம். இதில் பெங்களூருவை தவிர மாநிலத்தின் 2-ம் நிலை நகரங்களில் மென்பொருள் உற்பத்தி நிறுவனங்களை தொடங்க அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த தகவல் தொழில்நுட்பத்துறை மேலும் வலுவடையும். 2-ம் நிலை நகரங்களில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை தொடங்க அதிக முயற்சியை அரசு மேற்கொண்டுள்ளது.
உதாரணத்திற்கு இன்போசிஸ் நிறுவனம் மைசூரு, உப்பள்ளி மற்றும் மங்களூருவில் தனது கிளைகளை தொடங்கியுள்ளது. இதுபோன்ற முயற்சிகள் பிற நிறுவனங்களும் மேற்கொள்ளும். அதை ஊக்குவிக்கும் பணியை அரசு மேற்கொண்டுள்ளது. தற்போது 5ஜி அலைக்கற்றை வசதியை பெறும் நிலையில் நாம் உள்ளோம். ஆனால் மாநிலத்தில் அனைத்து பகுதிகளுக்கும் இன்னும் 4ஜி அலைக்கற்றை வசதியே கிடைக்கவில்லை. இதை முழுமையாக கொண்டு சென்று சேர்க்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது.
இணைய தொடர்பு
தொடர்பு வசதியை ஏற்படுத்துவது என்பது மிக முக்கியம். தேசிய கல்வி கொள்கையும் அமல்படுத்தப்படுகிறது. இதனால் இணைய தொடர்பு வசதி என்பது மிக முக்கியமாக தேவைப்படுகிறது. மைசூரு, மங்களூரு, உப்பள்ளி-தார்வார், சிவமொக்கா உள்ளிட்ட நகரங்களில் மின்சாதன உற்பத்தி நிறுவனங்கள், மென்பொருள் நிறுவனங்களை தொடங்க அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. கொரோனாவுக்கு முன்பு வீட்டில் இருந்து பணியாற்றுவது என்பது மிக குறைவாக இருந்தது.
ஆனால் கொரோனா வந்த பிறகு வீட்டில் இருந்து பணியாற்றுவது என்பது அதிகரித்துவிட்டது. இதற்கு இணைய தொடர்பு வசதி மிக அவசியம். இந்த இணைய தொடர்பு வசதி எல்லா இடங்களிலும் நன்றாக கிடைத்தால், எங்கிருந்து வேண்டுமானாலும் பணியாற்ற முடியும். இனி வரும் காலத்தில் இத்தகைய நிலை தான் ஏற்படப்போகிறது. பெங்களூருவை தவிர்த்து மாநிலத்தின் பிற பகுதிகளிலும் முதலீடுகள் செய்ய அதிக வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்படுகின்றன.
தொழில்நுட்பம்
கொரோனா சவாலை தொழில்நுட்பம் மூலம் எதிர்கொண்டுள்ளோம். அறிவியல்பூர்வமாக மென்பொருள் நிறுவனங்கள் மாநிலத்தின் எல்லா பகுதிகளிலும் தொடங்கப்பட வேண்டும். இது தான் புதிய தகவல் தொழில்நுட்ப கொள்கையின் விருப்பமாக உள்ளது.
இவ்வாறு அஸ்வத் நாராயண் கூறினார்.
புதிய தொழில்நுட்ப கொள்கையின்படி அடுத்த 5 ஆண்டுகளில் 60 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் அனைத்து பகுதிகளில் தொழில்நுட்பத்துறையை விஸ்தரித்து அதன் மூலம் சமமான வளர்ச்சியை ஏற்படுத்துவதே இந்த புதிய கொள்கையின் நோக்கமாக உள்ளது. இதற்கேற்ப மாநிலத்தின் பிற பகுதிகளில் மனிதவளத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்தப்படும்.
இந்த பேட்டியின்போது தகவல் தொழில்நுட்பத்துறை கூடுதல் தலைமை செயலாளர் ரமணரெட்டி உள்பட பலர் உடன் இருந்தனர்.