குன்னூரில் டேன்டீ அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகை
குன்னூரில் டேன்டீ அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;
குன்னூர்,
இலங்கையில் இருந்து தமிழகம் திரும்பிய தமிழர்களின் மறுவாழ்வுக்காக டேன்டீ என்று அழைக்கப்படும் தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகம் தொடங்கப்பட்டது. இது நீலகிரி மாவட்டம் மற்றும் கோவை மாவட்டம் வால்பாறை ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகிறது. இங்கு தேயிலை தோட்டங்கள் மற்றும் தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டு இலங்கையில் இருந்து வந்த தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது. தற்போது தேயிலை தோட்டங்களிலும், தொழிற்சாலைகளிலும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இதற்கிடையில் ஆண்டுதோறும் டேன்டீயில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த ஆண்டு 10 சதவீத போனஸ் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதற்கு தொழிலாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
இந்த நிலையில் 10 சதவீத போனஸ் வழங்கப்படும் என்ற அறிவிப்பை தமிழக அரசு திரும்ப பெற்றுவிட்டு, 20 சதவீத போனஸ் வழங்கப்படும் என்று அறிவிக்கக்கோரி குன்னூரில் செயல்படும் டேன்டீ தலைமை அலுவலகத்தை நேற்று தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர். முன்னதாக அவர்கள் குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் இருந்து ஊர்வலமாக வந்தனர். இதில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்த முற்றுகை போராட்டத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.
இதுகுறித்து தொழிலாளர்கள் கூறும்போது, ஆண்டுதோறும் வழங்குவது போல 20 சதவீத போனஸ் கேட்டு போராடுகிறோம். ஏற்கனவே நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் போராட்டத்தை கையில் எடுத்து உள்ளோம். எனவே கோரிக்கையை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும் என்றனர்.