ஊட்டி, கூடலூரில் கடும் பனிப்பொழிவு குளிரால் பொதுமக்கள் அவதி
ஊட்டி, கூடலூரில் கடும் பனிப்பொழிவு தொடங்கி உள்ளது. இதனால் குளிரில் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
கூடலூர்,
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை பெய்வது வழக்கம். நடப்பாண்டில் வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு பகலில் வெயிலும், இரவில் கடுங்குளிரும் நிலவி வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் இறுதி வரை பருவமழை பெய்ததால் ஜனவரி மாதம் உறை பனி கொட்டியது.
இந்த நிலையில் ஊட்டி நகரில் நேற்று முன்தினம் இரவு கடுங்குளிர் நிலவியது. நேற்று அதிகாலையில் உறை பனிப்பொழிவு தொடங்கியது. கடுங்குளிரால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் ஊட்டியில் உள்ள குதிரை பந்தய மைதானம், எச்.ஏ.டி.பி. விளையாட்டு மைதானம், ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, காந்தல் முக்கோணம் விளையாட்டு மைதானம், பிங்கர்போஸ்ட், தலைகுந்தா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள புல்வெளிகளில் உறை பனி படர்ந்து காணப்பட்டது. இதனால் வழக்கத்தை விட குளிர் அதிகமாக இருந்தது. காலையில் நடைபயிற்சி மேற்கொண்டவர்கள் புல்வெளிகளில் உறை பனி படர்ந்து இருந்ததை கண்டு ரசித்தனர். அவர்கள் தங்களது செல்போன்களில் புகைப்படம் எடுத்து கொண்டனர். கடுங்குளிரை போக்க கூலித்தொழிலாளர்கள், மூட்டை தூக்கும் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் நெருப்பு மூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர்.
வழக்கமாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஊட்டியில் பனிக்காலத்தை அனுபவிக்க வருகை தருவார்கள். தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு இருப்பதால் அவர்கள் வரவில்லை. உறை பனி தொடங்கி உள்ளதால் டீசலை எரிபொருளாக பயன்படுத்தும் லாரிகள், வாகனங்களில் பேட்டரி மூலம் என்ஜினை சூடேற்றி இயக்கும் வாகனங்களை தவிர மற்ற டீசல் வாகனங்களின் என்ஜின் மீது சுடுதண்ணீர் ஊற்றி இயக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. அதிகாலை நேரங்களில் பச்சை பசேலென காணப்படும் புல்வெளிகள் வெள்ளை நிறத்திலும், காய்கறி பயிர்கள் மீது உறை பனி படர்ந்தும் வருகிறது.
உறைபனி தாக்கம் காரணமாக வீடுகளில் சமையல் செய்வதற்கு தண்ணீர் சூடாக நீண்ட நேரம் பிடிக்கிறது. சூடு செய்யப்படாத நீரில் கைகளை கழுவினால் குளிரினால் கைகள் விரைத்து போகிறது. இதனால் பொதுமக்கள் வெதுவெதுப்பான தண்ணீரை பயன்படுத்துகிறார்கள். காய்கறி பயிர்கள் கருகாமல் பாதுகாக்க காலையில் ஸ்பிரிங்லர் மூலம் தண்ணீர் பாய்ச்சும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். தென் மாநிலங்களின் குளிர்பிரதேசம் என்று அழைக்கப்படும் ஊட்டியில் பனிக்காலத்தால் வட மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
இதேபோன்று கூடலூர் பகுதியில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்வது வழக்கம். நடப்பு ஆண்டில் வடகிழக்கு பருவமழை இதுவரை பெய்யவில்லை.
இதனால் நீர் நிலைகள் மற்றும் விவசாய நிலங்கள் வறண்டு கிடக்கிறது. மேலும் பகலில் நன்கு வெயிலும், இரவில் பனிப்பொழிவு காணப்படுகிறது. தற்போது காலநிலை மாற்றம் ஏற்பட்டு உள்ளதால், உறை பனிப்பொழிவு காணப்படுகிறது. இதனால் இரவு நேர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் மற்றும் பல்வேறு நிறுவனங்களின் பணிபுரியும் காவலாளிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். பொதுமக்கள் மாலை நேரம் தொடங்கியதும் கம்பளி ஆடைகளை அணிந்து வெளியே வருகின்றனர். நடுவட்டம், டி.ஆர். பஜார், அனுமாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் உறை பனிப்பொழிவு அதிகளவு காணப்படுகிறது.
இதனால் டி.ஆர்.பஜார் ஏரியில் காலை நேரத்தில் கடும் பனி மூட்டம் காட்சி அளிக்கிறது. மேலும் திறந்த வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள் முழுவதுமாக பனி படிந்து காணப்படுகிறது.