மாணவ-மாணவிகளுக்கு தன்னம்பிக்கை, துணிவு இருந்தால் வாழ்க்கையில் சாதிக்கலாம் வி.ஐ.டி.விழாவில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு

மாணவ-மாணவிகளுக்கு தன்னம்பிக்கை, துணிவு இருந்தால் வாழ்க்கையில் சாதிக்கலாம் என்று வி.ஐ.டி.யில் காணொலி காட்சி மூலம் நடந்த விழாவில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.

Update: 2020-11-12 12:14 GMT
வேலூர், 

வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் மகளிர் விடுதி மற்றும் மண்புழு உரம் தயாரிப்பு மையம் திறப்பு விழா நடந்தது. விழாவுக்கு வி.ஐ.டி.வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சங்கர் விசுவநாதன், துணை வேந்தர் டாக்டர் ராம்பாபு கொடாளி, இணை துணை வேந்தர் எஸ்.நாராயணன், பதிவாளர் கே.சத்யநாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி துணைத்தலைவர் காதம்பரி எஸ்.விசுவநாதன் வரவேற்றார்.

இதில், தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் காணொலி மூலம் மகளிர்விடுதி, மண்புழு உரம் தயாரிப்பு மையத்தை திறந்து வைத்து பேசியதாவது:-

மாணவ-மாணவிகளுக்கு தன்னம்பிக்கை மற்றும் துணிவு இருந்தால் வாழ்க்கையில் சாதிக்கலாம். மாணவர்களுக்கு மனஅழுத்தம் இருக்கக் கூடாது. மாறாக ஒவ்வொரு நிமிடமும் வாழ்க்கையை ரசித்து வாழ வேண்டும். மாணவர்கள் தங்களுக்கு பிடித்தமான விஷயத்தை சாதிக்க அர்ப்பணிப்போடு செயல்பட வேண்டும். அவ்வாறு செயல்படும்போது நாம் செய்யும் வேலை மிகவும் திறம்பட இருக்கும். கல்வியின் உதவியோடு மாணவர்கள் வாழ்க்கையில் முன்னேறுவதோடு ஒரு நாட்டுக்கு நல்ல குடிமகனாக உருவாகலாம். ஆசிரியர்கள் முழு அர்ப்பணிப்போடு வேலை செய்வதால் தான் மாணவர்கள் உட்பட அனைவரும் உயர்ந்த நிலைக்கு செல்கின்றனர். எனவே நாம் எப்போதும் ஆசிரியர்களை வணங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

வி.ஐ.டி.வேந்தர் ஜி.விசுவநாதன் பேசுகையில், “அரசாங்கம் அனைவருக்கும் கல்வி பயில வழிவகை செய்ய வேண்டும், குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு கட்டாயமாக இலவச கல்வி வழங்க வேண்டும். இதன் மூலம் பெண் குழந்தை திருமணத்தை தடுக்கலாம். சட்டசபை, நாடாளுமன்றத்தில் பெண்கள் இடம்பெறுவது அவர்கள் சமுதாயத்தில் சரிசமமான அதிகாரத்தோடு இருப்பதற்கு உதவுகிறது. வி.ஐ.டி. விடுதி, கட்டிடங்களுக்கு சிறந்த தலைவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் பெயர்கள் வைக்கப்படுகிறது. அதற்கு காரணம் மாணவர்கள் அவர்களை போன்று வாழ்க்கையில் உயர வேண்டும் என்பதற்காக தான்” என்று கூறினார்.

மேலும் செய்திகள்