தெருநாய்களை துரத்திச்சென்றபோது தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்த விவசாயி சாவு - திருக்கோவிலூர் அருகே பரிதாபம்

திருக்கோவிலூர் அருகே தெரு நாய்களை துரத்திச்சென்றபோது தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்த விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2020-11-12 05:45 GMT
திருக்கோவிலூர்,

திருக்கோவிலூரை அடுத்த பூமாரி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன்(வயது 45). விவசாயி. இவர் சம்பவத்தன்று இரவு தனது வீட்டு திண்ணையில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவில் தெருவில் நாய்கள் சத்தம் எழுப்பிதால் தூக்கம் கலைந்து கிருஷ்ணன் எழுந்தார். பின்னர் ஆத்திரம் தாங்க முடியாமல் அவர் நாய்களை துரத்திக்கொண்டே ஓடினார்.

அப்போது வழியில் திறந்த நிலையில் இருந்த தண்ணீர் தொட்டிக்குள் கிருஷ்ணன் தவறி விழுந்தார். இதில் அவருக்கு தலை மற்றும் உடலின் பல்வேறு பகுதிகளில் படுகாயம் ஏற்பட்டது. இதனால் வலி தாங்க முடியாமல் அவர் அபய குரல் எழுப்பினார்.

இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்து வீடுகளில் இருந்தவர்கள் வந்து கிருஷ்ணனை மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி பரிதாபமாக இறந்தார். இரவு நேரமாக இருந்ததால் நாய்களை துரத்திச் சென்றபோது தண்ணீர் தொட்டி இருப்பது தெரியாமல் கிருஷ்ணன் தவறி விழுந்து இறந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து திருப்பாலபந்தல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தெருநாய்களை துரத்திச் சென்றபோது தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து விவசாயி இறந்த சம்பவம் பூமாரி கிராம மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

மேலும் செய்திகள்