தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அமைக்கப்பட்ட தற்காலிக பஸ் நிலையங்கள் பயன்பாட்டுக்கு வந்தது
திருச்சியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அமைக்கப்பட்ட தற்காலிக பஸ் நிலையங்கள் பயன்பாட்டுக்கு வந்தது.;
திருச்சி,
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டும், பயணிகளின் நலன் கருதியும், திருச்சி மாநகரில் 11-ந் தேதி (நேற்று) முதல் 17-ந் தேதி வரை தஞ்சை, புதுக்கோட்டை மற்றும் மதுரை மார்க்கமாக செல்லும் அனைத்து பஸ்களும் தற்காலிக பஸ் நிலையங்களில் இருந்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மன்னார்புரம் ரவுண்டானா அருகே இருந்து புதுக்கோட்டை மற்றும் மதுரை மார்க்கம் வழியாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் இயக்கப்படும் என்றும், கண்டோன்மெண்ட் வில்லியம்ஸ் ரோடு சோனா மீனா தியேட்டர் அருகில் இருந்து தஞ்சை மார்க்கமாக செல்லும் பஸ்கள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதையொட்டி அங்கு பயணிகள் நிற்பதற்கான நிழற்குடைகள் வசதி, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி ஆகியவை செய்யப்பட்டன. இந்த நிலையில் தற்காலிக பஸ் நிலையங்கள் நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. திருச்சி மன்னார்புரத்தில் இருந்து பஸ்கள் போக்குவரத்தை போலீஸ் துணை கமிஷனர் வேதரத்தினம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக திருச்சி மண்டல பொது மேலாளர் ராஜ்மோகன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். மேலும், மத்திய பஸ் நிலையத்தில் இருந்து மன்னார்புரம் வருவதற்கும், மன்னார் புரத்திலிருந்து மத்திய பஸ் நிலையம் செல்வதற்கும் சுற்றுப் பஸ்களும், பஸ்கள் புறப்படும் நேரம் உள்ளிட்ட விவரங்கள் குறித்து அவ்வப்போது ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் நுண்ணறிவுப் பிரிவு உதவி கமிஷனர் ராமச்சந்திரன், போக்குவரத்து பிரிவு போலீஸ் உதவி கமிஷனர்கள் விக்னேஸ்வரன், முருகேசன், இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மன்னார்புரம் பகுதியில் அமைக்கப்பட்ட தற்காலிக பஸ் நிலையத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்த கொரோனா காலத்தில் பஸ்களில் பயணம் செய்யும் பொதுமக்கள் முக கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரங்களிலும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இதேபோல் டிராபிக் வார்டன்களும் தீபாவளி பண்டிகையையொட்டி தற்காலிக பஸ் நிலையம், மத்திய பஸ் நிலையம், கடைவீதி உள்பட பல்வேறு இடங்களில் பணியாற்றி வருகிறார்கள்.