திருச்செந்தூர்-பாளையங்கோட்டை இடையே ரூ.165 கோடியில் சாலை பணிகள் விரைவில் தொடங்கப்படும் எடப்பாடி பழனிசாமி தகவல்

திருச்செந்தூர்-பாளையங்கோட்டை இடையே ரூ.165 கோடி செலவில் சாலை பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Update: 2020-11-12 00:11 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி பேசினார். அப்போது, அவர் கூறியதாவது:-

தமிழக அரசு கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு கடுமையான நடவடிக்கைகள் மேற்கொண்டதன் விளைவாக தமிழகத்தில் கொரோனா தொற்று படிப்படியாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் தொழிற்சாலைகளுக்கு படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு தற்போது 100 சதவீதம் பணியாளர்களுடன் தொழிற்சாலைகளில் பணிகள் தொடங்கி உள்ளன. சொந்த ஊருக்கு சென்ற வெளிமாநில தொழிலாளர்களும் மீண்டும் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர்.

தொழிற்பூங்கா

பருவக்காலங்களில் பொழிகின்ற மழை நீரை சேமிப்பதற்காக 3 ஆண்டு கால திட்டமாக ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின் மூலம் பெறப்பட்ட 12 ஆயிரத்து 628 மனுக்களில் 5 ஆயிரத்து 426 தகுதியான மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது. இலவச வீட்டுமனை பட்டா கோரி பெறப்பட்ட 4,796 விண்ணப்பங்களில் தகுதியான 3,225 மனுக்கள் ஏற்கப்பட்டு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடி மாவட்டத்தில் அல்லிக்குளம் பகுதியில் புதிய தொழில் பூங்கா அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் அரசின் பரிசீலனையில் உள்ளது. விளாத்திகுளம் வட்டம் வைப்பாறு கிராமத்தில் ஒரு தொழில் பூங்கா அமைக்க 1,019 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் சிப்காட் நிறுவனத்தின் வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இந்த தொழிற்பூங்காவின் மூலம் சுமார் ரூ.2 ஆயிரம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டு, 2,500 பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படும்.

சாலை பணிகள்

சென்னை-கன்னியாகுமரி தொழில் பெருவழி திட்டத்தின் கீழ் திருச்செந்தூர்-பாளையங்கோட்டை வரை சுமார் 50 கிலோ மீட்டர் தூரம் ரூ.165 கோடி செலவில் சாலை அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது.

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு இதுவரை ரூ.140.23 கோடி கடன் வழங்கப்பட்டு உள்ளது. அம்மா இருசக்கர வாகனம் இதுவரை 7 ஆயிரத்து 36 பேருக்கு வழங்கப்பட்டு உள்ளது. இதுபோன்ற இன்னும் பல்வேறு திட்டங்கள் தூத்துக்குடி மாவட்டத்துக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை மேற்கொள்ளும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்