நவிமும்பையில் ரூ.3½ லட்சம் கள்ளநோட்டுகளுடன் வாலிபர் கைது

நவிமும்பையில் ரூ.3½ லட்சம் கள்ளநோட்டுகளுடன் வாலிபர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2020-11-11 21:00 GMT
மும்பை, 

நவிமும்பை கலம்பொலி பகுதிக்கு வாலிபர் ஒருவர் அதிகளவில் கள்ளநோட்டுகளுடன் வர உள்ளதாக பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவத்தன்று இரவு கலம்பொலி சயான்- பன்வெல் நெடுஞ்சாலையில் காத்திருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக வந்த வாலிபரை பிடித்து சோதனை போட்டனர். இதில் அவரிடம் இருந்து ரூ.3½ லட்சம் மதிப்பிலான 2 ஆயிரம், 500 மற்றும் 200 ரூபாய் கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில் வாலிபர் நவிமும்பை பகுதியில் வசித்து வரும் பைசல் இட்ரிஸ் சேக் (வயது24) என்பது தெரியவந்தது.

வெளிமாநில கும்பலுடன் தொடர்பு

இதையடுத்து வாலிபரின் வீட்டில் சோதனை நடத்திய போலீசார் அங்கு இருந்து கள்ளநோட்டுகள் அச்சடிக்க பயன்படுத்திய பிரிண்டர் உள்ளிட்ட சாதனங்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து கள்ளநோட்டுகளை அச்சடித்து புழகத்தில் விட்ட பைசல் இட்ரிஸ் சேக்கை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட பைசல் இட்ரிஸ் சேக்கிற்கு மேற்குவங்கம், குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களை சேர்ந்த கள்ளநோட்டு கும்பலுடன் தொடர்பு இருப்பதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்