கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;
கோவில்பட்டி,
கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் சங்கத்தினர் நேற்று கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். தேசிய விவசாயிகள் சங்க மாநில தலைவர் வெங்கநாயகலு தலைமை தாங்கினார். இளையரசனேந்தல் பிர்கா உரிமை மீட்பு குழு தலைவர் முருகன், மாவட்ட இயற்கை விவசாயிகள் சங்க தலைவர் கருப்பசாமி, மாநில ஆடு வளர்ப்போர் சங்க தலைவர் கருப்பசாமி, நகர தலைவர் ராமசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இளையரசனேந்தல் பிர்காவை கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைக்க வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
உதவி கலெக்டரிடம் மனு
பின்னர் அவர்கள் உதவி கலெக்டர் விஜயாவிடம் கோரிக்கை மனு வழங்கினர். அந்த மனுவில், கோவில்பட்டி அருகே இளையரசனேந்தல் பிர்காவுக்கு உட்பட்ட 12 ஊராட்சிகள் 2008-ம் ஆண்டில் தூத்துக்குடி வருவாய் மாவட்டத்தில் இணைக்கப்பட்டது. அத்துடன் உயர்கல்வி, சுகாதார துறை, பத்திரப்பதிவு, காவல் துறை, நீதித்துறை, நெடுஞ்சாலைத் துறை, சுகாதாரத் துறை, சமூக நலத்துறை ஆகிய அனைத்து துறைகளும் தூத்துக்குடி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.
இவைகள் இணைத்து சுமார் 12 ஆண்டுகளாகியும் பின்னரும் உள்ளாட்சி துறை இணைக்கப்படாமல் இருந்து வருகிறது.
இதனை இணைக்க வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை பல ஆண்டுகளாக நடத்தப்பட்டும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, 12 ஊராட்சிகளையும் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் மற்றும் கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதி, தூத்துக்குடி மக்களவை தொகுதியுடன் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.