குமரிக்கு அ.தி.மு.க. அரசு செய்த திட்டங்கள் என்னென்ன? முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பட்டியலிட்டு விளக்கம்

குமரி மாவட்டத்தில் அ.தி.மு.க. அரசு செய்த திட்டங்கள் என்னென்ன? என்பதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பட்டியலிட்டு விளக்கம் அளித்தார்.

Update: 2020-11-11 15:29 GMT
நாகர்கோவில், 

நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கொரோனா தடுப்பு பணி ஆய்வு கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, அவர் குமரி மாவட்டத்தில் அ.தி.மு.க. அரசு செய்த திட்டங்களை பட்டியலிட்டு விளக்கம் அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

குடிமராமத்துப்பணி என்ற சிறப்பான திட்டத்தை அ.தி.மு.க. அரசு நடைமுறைப்படுத்தியது. பல ஆண்டு காலமாக ஏரிகள், குளங்கள், ஊரணிகள் எல்லாம் தூர்வாரப்படாமல் இருந்தது. அதை எல்லாம் தூர்வாருவதற்காக இந்த அரசு குடிமராமத்து என்ற சிறப்பு திட்டத்தை உருவாக்கி, அதன் மூலமாக தூர்வாரப்படுகின்றன. இதை முழுக்க, முழுக்க விவசாயிகள் பங்களிப்போடு இந்த திட்டத்தை நடைமுறைபடுத்திக் கொண்டிருக்கிறோம். 2014- 2020 வரை ரூ.10 கோடி செலவில் 75 குடிமராமத்துப்பணிகள் குமரி மாவட்டத்தில் முடிக்கப்பட்டுள்ளன. 2020- 2021-ம் ஆண்டில் ரூ.3.82 கோடியில் 20 பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டு, பல்வேறு நிலைகளில் இருக்கின்றன.

அணைகள் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் விளவங்கோடு தாலுகாவில் சிற்றார் அணை 2 பகுதிகளாக ரூ.6 கோடி செலவிலும், கல்குளம் தாலுகாவில் பெருஞ்சாணி அணை ரூ.7.64 கோடி செலவிலும், பேச்சிப்பாறை அணை ரூ.61.35 கோடி செலவிலும் புனரமைக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளன. கல்குளம் தாலுகா மண்டைக்காடு பகுதியில் ரூ.7.82 கோடி செலவில் புதிதாக தூண்டில் வளைவு அமைக்கும் பணி நிறைவு செய்யப்பட்டுள்ளது.

இரவிபுத்தன்துறை கிராமத்தில் ரூ.3 கோடியிலும், சின்னத்துறை கிராமத்தில் ரூ.1.95 கோடியிலும் கடலரிப்பு தடுப்புச்சுவர் அமைக்கும் பணி நிறைவேற்றப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் அதிகமாக தூண்டில் வளைவு ஏற்படுத்த வேண்டும் என்ற மீனவர்களின் கோரிக்கையை ஏற்று தூண்டில் வளைவுகள் அமைக்கப்பட்டு வருகிறது. பூத்துறை கிராமத்தில் ரூ.14.68 கோடி மதிப்பீட்டிலும், கோவளம் கிராமத்தில் ரூ.11.02 கோடி மதிப்பீட்டிலும், அழிக்கால் கிராமத்தில் ரூ.9.38 கோடி மதிப்பீட்டிலும், மேல்மிடாலம் கிராமத்தில் ரூ.9.35 கோடி மதிப்பீட்டிலும், இனயம் கிராமத்தில் ரூ.8.12 கோடி மதிப்பீட்டிலும் தூண்டில் வளைவுகள் அமைக்கும் பணி தொடங்கப்பட உள்ளது. தோவாளை பெரியகுளத்தில் ரூ.84 லட்சத்தில் புனரமைக்கும் பணி நடைபெற உள்ளது.

அகஸ்தீஸ்வரம் தாலுகா தாமரைக்குளம் கிராமத்தில் பழையாற்றின் மிஷன் அணைக்கட்டின் கீழ் பகுதியில் ரூ.160 கோடி மதிப்பீட்டில் நீரேற்றுத் திட்டம், அதாவது இங்கிருந்து ராமநாதபுரம் கால்வாய்க்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்துக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரித்து செயல்படுத்தும் திட்டம் பரிசீலனையில் உள்ளது. பொழிக்கரை கிராமத்தில் ரூ.10.45 கோடி மதிப்பீட்டில் தொடர் தூண்டில் வளைவுகள் அமைக்கும் திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது.

கிள்ளியூர் தாலுகா அரையன் தோப்பில் ரூ.6 கோடி மதிப்பீட்டிலும், அகஸ்தீஸ்வரம் தாலுகா பொழிக்கரை கிராமத்தில் ரூ.5.55 கோடி மதிப்பீட்டிலும் கடலரிப்பு தடுப்புச்சுவர் அமைக்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளது. அகஸ்தீஸ்வரம் தாலுகா பழையாற்றின் குறுக்கே ரூ.5.55 கோடி மதிப்பீட்டிலும், கல்குளம் தாலுகா பாம்பூரி வாய்க்காலின் குறுக்கே ரூ.2.60 கோடி மதிப்பிலும் தடுப்பணை கட்டும் திட்டமும் பரிசீலனையில் உள்ளது. இதுதவிர சுமார் 30 இடங்களில் கடலரிப்பு தடுப்புச்சுவர் அமைக்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளது. மேலும் தடுப்பணைகள் அமைக்கும் திட்டமும் பரிசீலனையில் உள்ளது. தமிழ்நாட்டில் தடுப்பணைகள் கட்டுவதற்காக, 3 ஆண்டு காலத் திட்டமாக ரூ.1,000 கோடி ஒதுக்கி, குமரி மாவட்டத்திலும் பல இடங்களில் தடுப்பணைகள் கட்டியிருக்கின்றோம். இதுபோல வருங்காலத்திலும் பொழிகின்ற மழை நீரை அந்த தடுப்பணைகளில் சேமித்து நிலத்தடி நீர் உயர்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. வருங்காலங்களில் இதன் மூலம் நீர் சேமிக்கப்பட்டு நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்பாக அமையும்.

குமரி மாவட்டம் முழுவதும் அரசு நிதி, நபார்டு திட்டம் போன்றவற்றின் மூலமாக புதிய வகுப்பறைகள், குடிநீர் வசதி, அறிவியல் ஆய்வகங்கள், துணை சுகாதார நிலையங்கள், சார்நிலைக் கருவூல கட்டிடம் போன்ற பல அரசு கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. பல அரசு கட்டிடங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு கட்டிடம் கட்டும் பணி ரூ.10½ கோடியில் நடைபெற்று வருகிறது. கன்னியாகுமரி காந்தி மண்டபம் புனரமைத்தல் பணி ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.

ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த போது சுய உதவி குழுக்களுக்கு முன்னுரிமை அளித்தார். பெண்கள் சுயமாக தொழில் தொடங்கி பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும் என்பதற்காகத்தான் சுய உதவிக்குழுக்களை தொடங்கினார். அதிக கடன் உதவியும் செய்தார். குமரி மாவட்டத்தில் 6,564 மகளிர் சுய உதவி குழுக்கள் செயல்பட்டு வருகிறது. 39 ஆயிரத்து 403 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். கடந்த 3 ஆண்டுகளில் இந்த குழுக்களுக்கு இந்த அரசு வங்கி இணைப்புக் கடன் ரூ.1,082 கோடியே 47 லட்சம் வழங்கியுள்ளது. நடப்பாண்டில் ரூ.527 கோடி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதுவரை 4,202 பயனாளிகளுக்கு ரூ.210 கோடியே 37 லட்சம் வங்கி இணைப்புக்கடன் வழங்கப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 6,590 மகளிருக்கு அம்மா இருசக்கர வாகனம் மானியத்தில் வழங்கி உள்ளோம். மானியமாக ரூ.16 கோடியே 47 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளது. 2019- 2020-ல் 2703 பேருக்கு வாகன ஒதுக்கீடு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 994 பேருக்கு அம்மா இருசக்கர வாகனம் வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்காக ரூ.2.49 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் கிராமப்புறத்தில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்குவதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 2020- 2021-ம் ஆண்டில் 80 ஊராட்சிகளில் உள்ள 608 குக்கிராமங்களில் 63 ஆயிரத்து 680 வீடுகளுக்கு ரூ.47.76 கோடி மதிப்பீட்டில் வீடுகளுக்கான குடிநீர் இணைப்புகள் வழங்க ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் குமரி மாவட்டத்தில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. நாகர்கோவில் பாதாளச் சாக்கடை திட்டத்துக்கு ரூ.76.04 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த பணிகள் வருகிற டிசம்பர் மாதம் முடிக்கப்பட வேண்டும். அந்த பணிகள் மிகச்சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. குமரி மாவட்டத்தில் கூட்டுக் குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. அழகிய பாண்டியபுரம் கூட்டுக் குடிநீர் திட்ட பணிகள் ரூ.109.79 கோடியில் ஆரம்பிக்கப்பட்டு, இன்னும் ஒரு மாத காலத்துக்குள் அந்த பணிகள் முழுவதும் நிறைவுபெற்று இந்த பகுதியில் இருக்கிற மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும். இரணியல் கூட்டு குடிநீர்த் திட்டம், இரணியல் பேரூராட்சி மற்றும் 319 கிராம குடியிருப்புகள் பயன்பெறும் வகையில் ரூ.174 கோடி மதிப்பீட்டில் ஆரம்பிக்கப்பட்டு தற்பொழுது 71 சதவீத பணிகள் முடிவுற்றுள்ளன. எஞ்சிய பணிகளையும் விரைவாக செயல்படுத்த வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. துரிதமாக எஞ்சிய பணிகள் முடிக்கப்பட்டு, மக்களுடைய பயன்பாட்டுக்கு கொண்டுவர அரசு நடவடிக்கை மேற்கொள்ளும்.

நாகர்கோவில் மாநகராட்சியில் குடிநீர் அபிவிருத்தி திட்டம் ரூ.251.43 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. தற்பொழுது 77 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளன. குழித்துறை நகராட்சிக் குடிநீர் அபிவிருத்தித் திட்டம் ரூ.31 கோடி திட்ட மதிப்பீட்டில் செயல்படுத்த ஒப்பந்தப் புள்ளி இறுதி செய்யப்பட்டதும் இந்த பணிகள் தொடங்கப்படும். மக்களுக்கு நிலையான, பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதற்காக இந்த திட்டங்கள் அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குமரி மாவட்டத்தில் பிரதான தொழிலாக மீன்பிடி தொழில் அமைந்துள்ளது. மீனவர்களுக்கு தேவையான உதவிகளையும் இந்த அரசு செய்து வருகிறது. மீன்வளத் துறையில் 2020-ம் ஆண்டில் மீன்பிடி தடைகால நிவாரண நிதியாக ரூ.5 ஆயிரம் வீதம் குமரி மாவட்டத்தில் 27,517 கடலோர மீனவ குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. புதிய தூண்டில் முறை, சூறை மீன்பிடிப்பு மற்றும் செவுள் வலை விசைப்படகுகள் கட்டுவதற்கு ரூ.60 லட்சத்தில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.30 லட்சம் மானியமாக 16 பயனாளிகளுக்கு மானிய தொகை கொடுப்பதற்காக விடுவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒகி புயலால் பாதிக்கப்பட்ட 11 மீனவர்களுக்கு இத்திட்டத்தில் படகு கட்டுமான பணிகள் தற்போது நடந்து வருகிறது. ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ள 100 மீனவர்களுக்கு 75 சதவீத மானிய விலையில் செயற்கைக்கோள் செல்போன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதெல்லாம் மீனவர்களுக்காக இந்த அரசு செய்த உதவிகளாகும்.

வேளாண்மைத்துறையை பொறுத்தவரைக்கும் விவசாயிகள் பயன்பெறுவதற்காக அரசு பல்வேறு உதவிகளை செய்துள்ளது. செண்பகராமன்புதூரில் தென்னை மதிப்பு கூடுதல் மையம் ரூ.16 கோடியில் அமைக்கப்பட்டு வருகிறது. கூட்டுப்பண்ணையத் திட்டத்தின் கீழ் ரூ.10 கோடியே 15 லட்சம் மதிப்பீட்டில் 678 பண்ணை எந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 20 ஆயிரத்து 300 சிறு, குறு விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். இதற்காக, இந்த ஆண்டு ரூ.2 கோடியே 75 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தோவாளையில் வணிக வளாகம் ரூ.6 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. நுண்ணீர்ப் பாசனத் திட்டத்தின் கீழ், கடந்த 4 ஆண்டுகளில் ரூ.2 கோடியே 4 லட்சம் மானியம் வழங்கப்பட்டு நுண்ணீர்ப் பாசன அமைப்புகள் 1,453 ஏக்கரில் நிறுவ வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு ரூ.4 கோடியே 17 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

பயிர்க்காப்பீட்டு திட்டத்தின் கீழ் கடந்த 4 ஆண்டுகளில் 7,911 விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகையாக ரூ.5 கோடியே 45 லட்சம் அரசால் வழங்கப்பட்டுள்ளது. 59 விவசாயிகளுக்கு சூரியசக்தி பம்பு செட்டுகளும், 13 விவசாயிகளுக்கு சூரியக் கூடார உலர்த்திகளும் ரூ.2 கோடியே 16 லட்சத்து 23 ஆயிரம் மானியம் வழங்கப்பட்டுள்ளன. பண்ணைப் பணிகளை மேற்கொள்வதற்கு 113 விவசாயிகளுக்கு 113 வேளாண் எந்திரங்களுக்காக ரூ.1 கோடியே 24 லட்சத்து 57 ஆயிரம் மானியம் வழங்கப்பட்டுள்ளன. தென்னையில் சுருள் வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்திட நடப்பாண்டில் நிதி ஒதுக்கப்பட்டு, பயிர் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வளவும் விவசாயிகளுக்காக இந்த அரசு செய்த திட்டங்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த அரசு புதிதாக கிள்ளியூர், திருவட்டார் என இரண்டு தாலுகாக்களை உருவாக்கியது. 2019-2020-ம் நிதி ஆண்டில் அரசு இலவச வீட்டு மனைப் பட்டாக்கள் 3,724 நபர்களுக்கு கொடுத்துள்ளோம். முதியோர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் 17,060 மனுக்களில் தகுதியான 3,719 நபர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு முதியோர் ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது. பட்டா மாறுதலுக்கான விண்ணப்பங்கள் 1 லட்சத்து 15 ஆயிரத்து 230 பேரிடம் பெறப்பட்டு, தகுதி வாய்ந்த 63 ஆயிரத்து 9 நபர்கள் கண்டறியப்பட்டு பட்டா மாறுதல் வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் சிறப்புக் குறை தீர்க்கும் முகாம்களில் பெறப்பட்ட 46,277 மனுக்களில் 11,366 மனுக்கள் ஏற்கப்பட்டு அவைகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளன.

தொழில்துறையை பொறுத்தமட்டில் பதிவு செய்யப்பட்டது 26 ஆயிரத்து 386 மொத்த நிறுவனங்கள். இதில் 23 ஆயிரத்து 415 குறு நிறுவனங்களும், 2914 சிறு நிறுவனங்களும், 57 நடுத்தர தொழில் நிறுவனங்களும் உள்ளன. இதன்மூலம் 1.4 லட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டத்தில் 400 மர அறுவை மில்கள் உள்ளன. 2-வது உலக முதலீட்டாளர் மாநாட்டின்போது குமரி மாவட்டத்தில் ரூ.207.49 கோடி முதலீட்டில் தொழில் தொடங்குவதற்காக 252 சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, அவற்றில் 191 நிறுவனங்கள் ரூ.106.96 கோடி முதலீட்டில் தொழில்களை தொடங்கி உள்ளன.

குமரி மாவட்டத்தில் 16 தொழில் கூட்டுறவு சங்கங்கள் இயங்கி வருகின்றன. இந்த மாவட்டத்தில் 4792 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.135.97 கோடி கடன் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. கொரோனா நிவாரணம் மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் 62 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் வாடிக்கையாளர் ரூ.9.27 கோடி கடன் ஒப்புதல் வழங்கப்பட்டு ரூ.7.82 கோடி கடன் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பல வகைகளிலும் தமிழக அரசு குமரி மாவட்ட மக்களுக்கு நன்மைகளை செய்து வருகிறது. ஏற்கனவே இந்த அரசு அறிவித்த திட்டங்களை, முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகும் தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்