ஊரடங்கு தளர்வு: ஊட்டியில் அரசு அருங்காட்சியகம் திறப்பு தியேட்டர்கள் திறக்கவில்லை
ஊரடங்கு தளர்வை தொடர்ந்து ஊட்டியில் அரசு அருங்காட்சியகம் திறக்கப்பட்டது. ஆனால் தியேட்டர்கள் திறக்கப்படவில்லை.
ஊட்டி,
கொரோனா பாதிப்பு காரணமாக நீலகிரி மாவட்டம் ஊட்டியில் அரசு அருங்காட்சியகம் கடந்த மார்ச் மாதம் 17-ந் தேதி முதல் மூடப்பட்டது. கடந்த 7 அரை மாதங்களுக்கும் மேலாக சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட வில்லை. இதனால் ஆட்கள் இன்றி வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டது. இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு பாதுகாப்பு வழிமுறைகளுடன் அரசு அருங்காட்சியகங்கள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி ஊட்டியில் உள்ள அரசு அருங்காட்சியகம் நேற்று முதல் திறக்கப்பட்டது.
அங்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளுக்கு காய்ச்சல் உள்ளதா என்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தப்படுத்திய பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அருங்காட்சியகத்துக்குள் குதிரை, காட்டுப்பன்றி, காட்டெருமை, கரடி போன்ற வனவிலங்குகள் பதப்படுத்தி வைக்கப்பட்ட மாதிரிகள், நீலகிரி வாழ் பறவைகள், பாறைகள், கனிமங்கள், அஞ்சல் தலைகள், நாணயங்கள், ஓலைச்சுவடிகள், குகை ஓவியங்கள், புதைக்குழி பாண்டங்கள், உலோக கலைப் பொருட்கள், தோல் பாவைகள், இசைக்கருவிகள், மரச்சிற்பங்கள், விவசாய கருவிகள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்ததை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
மேலும் நீலகிரி மாவட்டத்தில் வசித்து வரும் தோடர், கோத்தர், பனியர், இருளர், குறும்பர், படுகர் இன மக்களின் பயன்பாட்டு பொருட்கள், கலாச்சாரங்கள் குறித்த புகைப்படங்கள் இடம் பெற்று உள்ளது. அருங்காட்சியகத்துக்குள் சுற்றுலா பயணிகள் சமூக இடைவெளியை கடைபிடிக்க குறிப்பிட்ட இடைவெளியில் வட்டங்கள் போடப்பட்டு இருக்கிறது. அங்கு மேல் மாடிக்கு படிக்கட்டு வழியாக செல்லும்போது கை வைக்கும் இடங்களில் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. முகக்கவசம் அணியாமல் வரும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை.
பெரியவர்களுக்கு ரூ.5, சிறியவர்களுக்கு ரூ.3 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. வழக்கமாக கட்டண டிக்கெட் சுற்றுலா பயணிகளுக்கு வழங்கப்படும். டிக்கெட் மூலம் நோய் பரவ வாய்ப்பு உள்ளதால் சுற்றுலா பயணிகளின் ஏ.டி.எம். கார்டு அல்லது கியூ.ஆர்.கோடு மூலம் ஆன்லைனில் பணம் செலுத்தும் வசதி செய்யப்பட்டு உள்ளது. 7 அரை மாதங்களுக்கு பின்னர் திறக்கப்பட்ட அருங்காட்சியகத்துக்கு நேற்று சுற்றுலா பயணிகள் வருகை தந்து கண்டு ரசித்தனர். அவர்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தவைகளை பார்வையிட்டதுடன் அதன் விவரங்களை கேட்டறிந்தனர். தங்களது செல்போன்களில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
தமிழகம் முழுவதும் தியேட்டர்கள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கலெக்டர் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அசெம்பிளி தியேட்டர் மற்றும் தனியார் தியேட்டர் நேற்று திறக்கப்பட வில்லை. இதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். புதிய திரைப்படங்கள் திரையிடுவதில் சிக்கல் உள்ளதாலும், சுற்றுலா பயணிகள் குறைந்த எண்ணிக்கையில் வந்து செல்வதாலும் வருகிற நாட்களில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.