சீகூர் வனத்தில் சேற்றில் வழுக்கி விழுந்து குட்டி யானை சாவு

சீகூர் வனத்தில் குட்டி யானை சேற்றில் வழுக்கி விழுந்து பரிதாபமாக இறந்தது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2020-11-11 13:31 GMT
கூடலூர், 

முதுமலை புலிகள் காப்பக உள்வட்டத்தில் கார்குடி, தெப்பக்காடு, வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளிட்ட வனச்சரகங்களும், வெளி மண்டல பகுதியில் மசினகுடி, சிங்காரா, சீகூர் உள்ளிட்ட வனச்சரகங்களும் உள்ளன. இங்கு காட்டு யானைகள், புலிகள், செந்நாய்கள், காட்டெருமைகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகம் வசித்து வருகின்றன. வனப்பகுதியில் புலிகள் காப்பக வனத்துறையினர் வன குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க தினமும் ரோந்து பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சீகூர் வனச்சரக பகுதியில் வனத்துறையினர் நேற்று முன்தினம் ரோந்து மேற்கொண்டனர். அப்போது மாலை 5 மணிக்கு ஆனைக்கட்டி என்ற இடத்தில் குட்டியானை ஒன்று இறந்து கிடப்பதை கண்டனர். இதைத்தொடர்ந்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மேலும் மாலை நேரம் ஆகிவிட்டதால் குட்டி யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்ய முடியவில்லை. இதனால் வன ஊழியர்கள் அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து நேற்று புலிகள் காப்பக துணை இயக்குனர் (வெளி மண்டலம்) ஸ்ரீகாந்த், வனச்சரகர் முரளி உள்ளிட்ட வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று குட்டி யானையின் உடலை பார்வையிட்டனர். அப்போது சேற்றில் நடக்க முடியாமல் குட்டி யானை வழுக்கி விழுந்து அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது. பின்னர் புலிகள் காப்பக கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் வரவழைக்கப்பட்டு, பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, பிறந்து 1 மாதம் மட்டுமே ஆன பெண் குட்டி யானை, தாய் மற்றும் அதன் கூட்டத்தோடு வந்துள்ளது. அப்போது சேற்றில் வழுக்கி விழுந்ததில் நெஞ்சுப்பகுதியில் அடிபட்டு இறந்து இருக்கிறது என்றனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்