திருப்பத்தூரில் தடையை மீறி பொதுக்கூட்டம்: சி.பி.ராதாகிருஷ்ணன் உள்பட 300 பேர் கைது
திருப்பத்தூரில் தடையை மீறி நடந்த பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் கயிறுவாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் உள்பட 300 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பத்தூர்,
பா.ஜ.க.வின் வேல் யாத்திரைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று திருப்பத்தூரில் கலெக்டர் அலுவலகம் எதிரே வேல் யாத்திரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல் தலைமையில் கலெக்டர் அலுவலகம் எதிரில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் பா.ஜ.க. தலைவர் முருகன் சென்னையில் இருந்து திருப்பத்தூர் வருவதாக இருந்தது. அவரை போலீசார் கைது செய்ய திட்டமிட்டிருந்ததால் அவர் ஓசூர் சென்று விட்டார். அதைத்தொடர்ந்து பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சி.வாசுதேவன் தலைமை தாங்கினார். கோட்ட பொறுப்பாளர் கோ.வெங்கடேசன் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் வக்கீல் அன்பழகன் வரவேற்றார்.
கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் ராகவன், முன்னாள் கயிறு வாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். அப்போது மோடிக்கு எதிராக தமிழகத்தில் திராவிட கட்சிகளின் பொய் பிரசாரத்தால் பா.ஜ.க. வெற்றிபெற முடியவில்லை. ஆனாலும் தமிழகத்துக்கு 11 மருத்துவ கல்லூரியை மத்திய அரசு கொடுத்துள்ளது. வரும் காலங்களில் பா.ஜ.க.வின் குரல் சட்டமன்றத்தில் ஒலிக்கும் என்றனர்.
கூட்டத்தில் மாநில மகளிர் அணி செயலாளர் கார்த்தியாயினி, பொதுச் செயலாளர்கள் கண்ணன், ஈஸ்வர், மாவட்ட செயலாளர் பி. சரவணன், மாநில மருத்துவ அணி செயலாளர் டாக்டர் சற்குணபிரபு, எஸ்.டி. பிரிவு மாநில துணைத்தலைவர் ஐ.வி.எல்.கோவிந்தராஜ், தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் சண்முகா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகரத் தலைவர் அருள்மொழி நன்றி கூறினார்.
தடையை மீறி கூட்டம் நடத்தியதாக சி.பி.ராதாகிருஷ்ணன் உள்பட 300 பேரை திருப்பத்தூர் டவுன் போலீசார் கைதுசெய்தனர்.