கீரப்பாளையத்தில், தமிழக அரசை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் - எம்.எல்.ஏ.க்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், துரை.கி.சரவணன் பங்கேற்பு
கீரப்பாளையத்தில் தமிழக அரசை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் எம்.எல்.ஏ.க்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், துரை.கி.சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
புவனகிரி,
சிதம்பரம் அருகே கீரப்பாளையத்தில் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நேற்று தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி சார்பில் அ.தி.மு.க. அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தி.மு.க. மாநில பொறியாளர் அணி செயலாளரும், புவனகிரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான துரை.கி. சரவணன் தலைமை தாங்கினார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் அறவாழி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆறுமுகம், இந்திய கம்யூனிஸ்டு துரை, ம.தி.மு.க. குணசேகரன், திராவிடர் கழகம் யாழ்திலீபன், தமிழக வாழ்வுரிமை கட்சி சேரலாதன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அப்துல்ரகுமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, விவசாயிகள், ஏழை எளிய மக்களை வஞ்சிக்கும் மத்திய மாநில அரசை கண்டித்து பேசினர். இதில் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் சபாநாயகம், திருமூர்த்தி, மனோகர், விவசாய அணி அமைப்பாளர் பாலு, கவுன்சிலர் கீர்த்திவாசன், காங்கிரஸ் செழியன், பழனிவேல், விடுதலை சிறுத்தைகள் அருண், சாரதி, ரஜினி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வாஞ்சிநாதன், இந்திய கம்யூனிஸ்டு அன்பழகன், ம.தி.மு.க. உத்திராபதி, தமிழக வாழ்வுரிமை கட்சி அகில்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டம் முடிவில், எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறுகையில், தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் மீது மக்கள் அதிகளவில் நம்பிக்கை வைத்துள்ளனர். எனவே அடுத்து வர இருக்கிற தேர்தலில் தி.மு.க. நிச்சயம் ஆட்சியை பிடிக்கும். அ.தி.மு.க. ஆட்சியில் இப்போது ஊழல் மலிந்து விட்டது. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. அரசின் நலத்திட்ட உதவிகள் அ.தி.மு.க.வினருக்கு மட்டுமே கிடைக்கிறது. மக்களுக்கு இந்த ஆட்சியால் எந்த பயனும் இல்லை. உள்ளாட்சி அமைப்புகளில் வீடு கட்டுவது, கழிவறை கட்டுவது என பல திட்டங்களிலும் ஊழல் நடக்கிறது. இதுபோல் குடிநீர் திட்டத்திலும் பல்வேறு ஊழல்கள் நடைபெறுகிறது. தேர்தல் வரும்போது மட்டுமே பாரதிய ஜனதா கட்சி யாத்திரை நடத்துகிறது. மற்ற நேரங்களில் எதுவும் செய்வதில்லை. பா.ஜ.க.வின் யாத்திரையை பார்த்து மக்கள் ஏமாற மாட்டார்கள்.
இவ்வாறு பன்னீர்செல்வம் கூறினார்.