சிவகங்கை அருகே, சேலை மூடைக்குள் பெண்ணின் எலும்புக்கூடு - கொலை செய்து வீசினார்களா? போலீஸ் விசாரணை

சிவகங்கை அருகே கால்வாயில் பெண்ணின் எலும்புக்கூடு சேலையில் மூடையாகக் கட்டி போடப்பட்டிருந்தது. எனவே அந்தப் பெண்ணை யாராவது கொலை செய்து வீசி சென்றார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2020-11-10 22:45 GMT
சிவகங்கை,

சிவகங்கையை அடுத்த புதுப்பட்டியில் உள்ள ஊருணி அருகில் வரத்து கால்வாய் ஒன்று உள்ளது. பல ஆண்டுகளாக அந்தக்கால்வாய் சீரமைக்கப்படாததால் அந்த பகுதி மண் மேடாகி முள் செடிகள் வளர்ந்து புதர் போல் கிடந்தது.

இதை தொடர்ந்து நேற்று காலையில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் கால்வாய் சீரமைக்கும் பணியில் பெண்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு ஒரு சேலை மூடை கிடந்தது. மூடையின் ஒரு பகுதியில் மண்டையோடு ஒன்று தெரிந்தது. இதனால் சீரமைப்பு பணியில் ஈடுபட்ட பெண்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து சிவகங்கை நகர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் நகர் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகானந்தம், வெள்ளைச்சாமி, மற்றும் போலீசார் அங்கு சென்று அந்த மூடையை பிரித்து பார்த்தனர்.

அதில் மண்டைஓடு, கால் எலும்பு, கை எலும்பு உள்ளிட்ட உடலின் பாகங்கள் அடங்கிய எலும்புக்கூடு தனித்தனியாக கிடந்தன. அதில் சேலை ஒன்றும் ஜாக்கெட் ஒன்றும் இருந்தது. அவைகளை 10 சேலைகளில் மூடையாக கட்டி போட்டிருந்தனர். இதைதொடர்ந்து தடயவியல் நிபுணர்கள் வந்து அங்கு கிடந்த எலும்பு கூடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அந்த எலும்புக்கூடுகள் பெண்ணுடையதாக இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.

மேலும் யாராவது அந்தப்பெண்ணை கொலை செய்து பிணத்தை சேலைகளை கொண்டு மூடையாக கட்டி இங்கு கொண்டு வீசி சென்று இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.

இதை தொடர்ந்து அந்தப்பகுதியில் இளம்பெண்கள் யாரேனும் காணாமல் போயுள்ளார்களா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்