மணப்பாறை அருகே பரபரப்பு: மேல்நிலை தொட்டி மீது ஏறி கிராம மக்கள் போராட்டம்

மணப்பாறை அருகே இடப்பிரச்சினை தொடர்பாக கிராம மக்கள் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-11-10 22:15 GMT
மணப்பாறை, 

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த தனி மாணிக்கம்பட்டி பகுதியில் உள்ள குறிப்பிட்ட நிலம் அதே பகுதியை சேர்ந்த சுமார் 6 பேருக்கு உரிமையானது என கூறப்படுகிறது. அதற்கான பட்டாவும் உள்ளது. இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்தவர் தனக்கு தான் அந்த இடம் சொந்தம் என்றும், அதற்கு பட்டா உள்ளிட்ட ஆவணங்கள் இருப்பதாகவும் கூறி வந்தார்.

இதுதொடர்பாக பல்வேறு துறை அதிகாரிகளுக்கும் தொடர்ந்து புகார் அளித்து வந்துள்ளார். இதையடுத்து கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து இந்த பிரச்சினை தொடர்பாக மக்கள் ஒவ்வொரு முறையும் விசாரணைக்கு ஆஜராகி தங்களின் கருத்துக்களை தெரிவித்துள்ளதுடன் சம்பந்தப்பட்ட இடத்தை அளந்து உரிய தீர்வு காணவழிவகை செய்ய வேண்டும் என்றும் கூறி வந்துள்ளனர். ஆனால் இன்னும் அதற்கு தீர்வு கிடைக்கவில்லை.

இந்நிலையில் நேற்று முன்தினம் இதுதொடர்பாக மணப்பாறை துணை போலீஸ் சூப்பிரண்டு பிருந்தா பேச்சுவார்த்தை நடத்தி தாசில்தார் மூலம் முதலில் ஆவணங்களை சரிபார்த்து பின்னர் உரிய தீர்வு காணப்படும் என்று கூறி அனுப்பி வைத்துள்ளார். ஆனால் சம்பந்தப்பட்ட நபர், கிராம மக்களிடம் தனக்கு சொந்தமான இடம், ஆகவே அதில் உள்ள வீடுகளை இடிப்பதாக கூறியதாக கூறப்படுகின்றது. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் நேற்று காலை அங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். 6 பெண்கள், 3 ஆண்கள் என 9 பேர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மீதும், மற்றவர்கள் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் அருகிலும் நின்று தங்களின் கோரிக் கை குறித்து கோஷங்கள் எழுப்பி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதோடு தங்களின் ஆதார் மற்றும் குடும்ப அட்டைகளையும் சாலையில் வீசி போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த மணப்பாறை தீயணைப்பு நிலைய அலுவலர் கணேசன் தலைமையிலான தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத்திற்கு சென்று மக்களை கீழே இறங்கி வரும்படி கூறினர். ஆனால் அவர்கள் வர மறுத்தனர்.

இதைத்தொடர்ந்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன் மற்றும் போலீசார், தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று, அவர்களை கீழே இறங்கி வரும்படி கூறி பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் இந்த பிரச்சினை பல ஆண்டுகளாக நீடித்துக்கொண்டே இருக்கிறது. என வே சம்பந்தப்பட்ட அனைத்து துறை அதிகாரிகளும் வந்தால் மட்டுமே இதற்கு தீர்வு கிடைக்கும் என்று கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த பிரச்சினையில் உரிய தீர்வு காண முதலில் ஆவணங்களை எல்லாம் பார்க்க வேண்டும். ஆகவே அதற்கு அவகாசம் தேவைப்படுவதுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி மக்களின் கோரிக்கைக்கு உரிய தீர்வு காண வழிவகை செய்யப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறியதை அடுத்து 4 மணி நேரம் நடைபெற்ற போராட்டம் நிறைவுக்கு வந்தது. மக்கள் போராட்டத்தை கைவிட்டு தங்களின் அடையாள அட்டைகளை எடுத்துச் சென்றனர். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மீது ஏறி நின்றவர்களும் இறங்கி வந்தனர். இந்த போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்