டெக்ஸ்டைல் நிறுவனத்தின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் திருட்டு - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
டெக்ஸ்டைல் நிறுவனத்தின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கரூர்,
கரூர் நகராட்சிக்கு உட்பட்ட அமுதம் நகரில் டெக்ஸ்டைல் நிறுவனம் ஒன்று உள்ளது. சசிகுமார் என்பவர் இந்த நிறுவனத்தின் மேலாளராக உள்ளார். நேற்று முன்தினம் வழக்கமான பணிகளை முடித்து விட்டு அலுவலகத்தை பூட்டிவிட்டு சசிகுமார் வீட்டுக்கு சென்றுவிட்டார். அடுத்த நாள் காலை அலுவலகத்தை திறக்க வந்தபோது முன் பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
இதனால், அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு வைக்கப்பட்டிருந்த ஒரு லட்சத்து 92 ஆயிரம் பணம் திருட்டு போய் இருந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் சசிகுமார் கொடுத்த கொடுத்த புகாரின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் வழக்குப்பதிவு செய்து இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த திருட்டு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.