வேப்பந்தட்டை அருகே, வயலில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த சிறுவன் சாவு
வேப்பந்தட்டை அருகே வயலில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த சிறுவன் பரிதாபமாக இறந்தான்.;
வேப்பந்தட்டை,
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அரசலூர் கிராமத்தை சேர்ந்தவர் சேவியர். இவருடைய மகன் ரெட்ஸ்ரேவன்(வயது 6).
இவன் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான். சேவியர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இதனால் தாய் சுதாடென்சியுடன், ரெட்ஸ்ரேவன் வசித்து வந்தான். இந்நிலையில் ரெட்ஸ்ரேவன் ஊருக்கு அருகே உள்ள எலிசா என்பவரது வயலுக்கு சென்றான். அப்போது வயலில் மின்சார கம்பி அறுந்து கிடந்தது. அது தெரியாமல் மின்கம்பியை மிதித்ததில் ரெட்ஸ்ரேவன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தான்.
இது பற்றி தகவல் அறிந்த அரும்பாவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுவனின் உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்கம்பியை மிதித்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.