நிலம் வாங்கி தருவதாக ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.13 லட்சம் மோசடி தந்தை, மகன் கைது

நிலம் வாங்கி தருவதாக ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.13 லட்சம் மோசடியில் ஈடுபட்ட தந்தை, மகன் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2020-11-10 22:57 GMT
திருவள்ளூர், 

சென்னை சவுகார்பேட்டை காளத்தி பிள்ளை தெருவை சேர்ந்தவர் ஹரிஹந்த் கோத்தி (வயது 36). இவர் திருவள்ளூர் மற்றும் பொன்னேரி பகுதிகளில் ரியல் எஸ்டேட் தொழில் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள தடப்பெரும்பாக்கம், காந்தி நகர் பகுதியை சேர்ந்த சுப்பராமன் (63), அவரது மனைவி சரஸ்வதி (62) மகன் பாலச்சந்தர் (43) ஆகியோர் ஹரிஹந்த் கோத்தியிடம் பொன்னேரியை சேர்ந்த ஒருவரிடமிருந்து நிலம் வாங்கி தருவதாக கூறியுள்ளனர். அதற்கு ரூ.13 லட்சம் ஆகும் என கூறியுள்ளனர். இதைத்தொடர்ந்து ஹரிஹந்த் கோத்தி அவர்கள் கூறியதுபோல் ரூ.13 லட்சத்தை கடந்த 2008-ம் ஆண்டு கொடுத்தார்.

பணத்தை பெற்றுக்கொண்ட 3 பேரும் இதுநாள் வரையிலும் அவருக்கு நிலத்தை பெற்று தராமல் காலம் தாழ்த்தி வந்தனர். பலமுறை அவர்களை அணுகிய ஹரிஹந்த் கோத்தி தனக்கு நிலத்தை வாங்கி தருமாறு கூறியுள்ளார். இருப்பினும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தனர்.

கைது

இதுகுறித்து அவர் திருவள்ளூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் அனுமந்தன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சுசீலா, குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று சுப்பராமன், அவரது மகன் பாலச்சந்தர் ஆகியோரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள சரஸ்வதியை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்