காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர்களுக்கு கொரோனா
காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.;
செங்கல்பட்டு,
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார். கடந்த மாதம் 30-ந்தேதி மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்று கொண்ட இவர் மாவட்டத்தில் வெள்ளத்தடுப்பு பணிகளை ஆய்வு செய்தார். காஞ்சீபுரம் ஓரிக்கையில் சாலை பணிகளை தொடங்கி வைத்தார். பல்வேறு துறை அதிகாரிகளை வைத்து ஆய்வு கூட்டங்களை நடத்தினார். இடைவிடாமல் பணிகளை கவனித்து வந்தார்.
இந்த நிலையில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து சுகாதாரத்துறையினர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
ஆஸ்பத்திரியில் அனுமதி
இதையடுத்து அவர் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாருக்கு கணவரும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு அவர்களும் கலெக்டர் அலுவலக முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து காஞ்சீபுரம் பெருநகராட்சி ஊழியர்கள் கலெக்டர் அலுவலகத்தில் பல இடங்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர். கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவருடன் ஆய்வு கூட்டங்களில் கலந்து கொண்ட அதிகாரிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
செங்கல்பட்டு
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ். இவர் மாவட்டம் முழுவதும் நேரில் சென்று அரசின் நல திட்ட உதவிகள் வழங்குதல், அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டங்களில் பங்கேற்றார். இந்த நிலையில் திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அவரது குடும்பத்தினர் மற்றும் வீட்டில் வேலை செய்யக்கூடியவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அவர்கள் தங்களை தனிமைப்படுத்தி கொண்டனர்.