பொது சேவை மையங்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் அதிகாரிகள் திடீர் ஆய்வு
பொதுசேவை மையங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் தெரிவிக்கப்பட்டதையடுத்து அதிகாரிகள் அங்கு அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர்.;
காரைக்கால்,
காரைக்கால் மாவட்டத்தில் வருவாய்த் துறையில் சாதி, குடியிருப்பு, வருமான சான்றிதழ்கள் பெறுவதில் பொதுமக்களுக்கு ஏற்படும் கால தாமதத்தை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் சார்பில் இந்த சான்றிதழ்களை ஆன்லைன் மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி காரைக்காலில் இயங்கிவரும் பொதுசேவை மையங்கள், இண்டெர்நெட் மையங்களில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையானவற்றுக்காக விண்ணப்பித்து சான்றிதழ்களை பெற்று வருகின்றனர்.
இந்தநிலையில் ஒருசில சேவை மையங்களில் பொதுமக்களிடம் இருந்து கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார்கள் சென்றன. இதனையடுத்து கலெக்டர் அர்ஜூன் சர்மா பொதுசேவை மையங்கள், இண்டர்நெட் மையங்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்யும்படி உத்தரவிட்டார்.
திடீரென்று ஆய்வு
அதன்படி காரைக்கால் மாவட்ட வருவாய்த்துறை துணை தாசில்தார் மதன் குமார் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் போலீசார் பாதுகாப்புடன் காரைக்காலில் உள்ள பொதுசேவை மையங்களில் நேற்று திடீரென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது விண்ணப்பம் ஒன்றுக்கு 25ரூபாயும், ஆவணங்களை ஸ்கேன் செய்யவும், பிரிண்ட் எடுக்கவும் பக்கம் ஒன்றுக்கு ரூ.2 எனவும் அரசு நிர்ணயித்துள்ளது. இந்த தொகையை விட கூடுதலாக வசூலிக்கக் கூடாது, வசூலிக்கும் கட்டணத்திற்கு கண்டிப்பாக ரசீது வழங்க வேண்டும். மீறினால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர். இதற்கு பிறகும் சான்றிதழ்களுக்காக கூடுதல் கட்டணம் வசூல் செய்யும் பொது சேவை மையங்கள் குறித்து பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் அளிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டது.