நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் பூர்வீக வீடு உள்பட சொத்துகள் ஏலம்
நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமிற்கு சொந்தமான பூர்வீக வீடு உள்பட சொத்துகள் ஏலத்தில் விடப்பட்டது.
மும்பை,
மும்பையில் 1993-ம் ஆண்டு நடந்த பயங்கர குண்டு வெடிப்பு சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான தாவூத் இப்ராகிம் தற்போது வெளிநாட்டில் தலைமறைவாக உள்ளார். அவர் பாகிஸ்தானில் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் இந்தியாவில் உள்ள அவரது சொத்துகள் ஏலத்தில் விடப்பட்டு வருகின்றன. நேற்று தாவூத் இப்ராகிமிற்கு சொந்தமான சொத்துகளை ஏலத்தில் விடும் நிகழ்ச்சி மும்பையில் ஆன்லைன் மூலம் நடந்தது. இதில் அவருக்கு சொந்தமான 6 சொத்துகள் ஏலத்தில் எடுக்கப்பட்டது.
பூர்வீக வீடு
ஏலம் போனதில் ரத்னகிரி மாவட்டம் மும்கே கிராமத்தில் உள்ள தாவூத் இப்ராகிமின் பூர்வீக வீடும் அடங்கும். அந்த வீடு ரூ.11.20 லட்சத்திற்கு ஏலம் போனது. தாவூத் இப்ராகிம் மும்பையில் குடியேறும் முன் அந்த வீட்டில் தான் 1983-ம் ஆண்டு வரை வசித்து வந்தார். டெல்லியை சேர்ந்த வக்கீல் அஜய் ஸ்ரீவட்சவ், தாவூத் இப்ராகிமின் பூா்வீக வீடு, அவரது தாய் மற்றும் சகோதரி பெயரில் இருந்த 25 சென்ட் நிலம் ஆகியவற்றை ஏலத்தில் எடுத்தார்.
புபேந்திர பரத்வாஜ் என்ற வக்கீல் தாவூத் இப்ராகிமின் 4 சொத்துகளை ஏலத்தில் எடுத்து உள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “இதை பணத்திற்காக செய்யவில்லை. தாவூத் இப்ராகிமிற்கு நாங்கள் பயப்படவில்லை, அவரது சொத்துகளை வாங்க முடியும் என்ற செய்தியை அனுப்பவே செய்கிறோம். அவரால் வெளிநாட்டில் இருந்து கொண்டு நமது அப்பாவி மக்களை கொல்ல முடியும் என்றால், நாமும் அரசுக்கு இதுபோன்ற பங்களிப்பை அளித்து உதவி செய்ய வேண்டும், என்றார்.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரத்னகிரியில் உள்ள தாவூத் இப்ராகிமிற்கு சொந்தமான நிலம் ஏலத்தில் விடப்படவில்லை. அந்த நிலம் விரைவில் ஏலம் விடப்படும் என அதிகாாி ஒருவர் கூறினார்.