ஆர்.ஆர்.நகர், சிரா தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பா.ஜனதா அபார வெற்றி
கர்நாடக சட்டசபையில் காலியாக இருந்த ஆர்.ஆர்.நகர், சிரா ஆகிய 2 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பா.ஜனதா அபார வெற்றி பெற்றது. காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) ஆகிய கட்சிகள் வசம் இருந்த இந்த இரண்டு தொகுதிகளையும் பா.ஜனதா கைப்பற்றியது.
பெங்களூரு,
ஜனதா தளம்(எஸ்) கட்சியை சேர்ந்த சத்யநாராயணா எம்.எல்.ஏ.(சிரா) கடந்த 4 மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார்.
31 பேர் போட்டி
ஆர்.ஆர்.நகர்(ராஜராஜேஸ்வரிநகர்) தொகுதி எம்.எல்.ஏ. பதவியை காங்கிரசை சேர்ந்த முனிரத்னா ராஜினாமா செய்துவிட்டு பா.ஜனதாவில் சேர்ந்தார். இதனால் கர்நாடக சட்டசபையில் சிரா மற்றும் ஆர்.ஆர்.நகர் ஆகிய 2 தொகுதிகளும் காலியாக இருந்தன. அந்த 2 தொகுதிகளுக்கும் தேர்தல் ஆணையம் அறிவித்தபடி கடந்த 3-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.
இந்த இடைத்தேர்தலில் சிரா தொகுதியில் ஆளும் பா.ஜனதா சார்பில் ராஜேஸ்கவுடா, காங்கிரஸ் சார்பில் டி.பி.ஜெயச்சந்திரா, ஜனதா தளம்(எஸ்) சார்பில் அம்மஜம்மா ஆகியோர் உள்பட 15 பேரும், ஆர்.ஆர்.நகர் தொகுதியில் பா.ஜனதா சார்பில் முனிரத்னா, காங்கிரஸ் சார்பில் குசுமா, ஜனதா தளம்(எஸ்) சார்பில் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உள்பட 16 பேரும் என மொத்தம் 31 பேர் போட்டியிட்டனர். கடந்த 3-ந் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில் 64 சதவீத வாக்குகள் பதிவாயின.
முன்னிலையில் இருந்தனர்
ஆர்.ஆர்.நகர் தொகுதி மின்னணு வாக்கு எந்திரங்கள், அதே தொகுதியில் உள்ள ஞானாக்ஷி வித்யா நிகேதன் பள்ளியிலும், சிரா தொகுதி வாக்கு எந்திரங்கள் துமகூருவில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியிலும் வைக்கப்பட்டிருந்தன. ஓட்டு எண்ணிக்கை மையங்களில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் திட்டமிட்டபடி ஆர்.ஆர்.நகர், சிராவில் நேற்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது.
ஓட்டு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து இரு தொகுதிகளிலும் பா.ஜனதா வேட்பாளர்களே முன்னிலையில் இருந்தனர். அவர்கள் கடைசி சுற்று வரை தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்தனர். கடைசியில் ஆர்.ஆர்.நகர் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் முனிரத்னா, சிராவில் பா.ஜனதா வேட்பாளர் ராஜேஸ்கவுடா ஆகியோர் வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். ஆர்.ஆர்.நகர் தொகுதியில் மொத்தம் 4 லட்சத்து 62 ஆயிரத்து 236 வாக்குகள் உள்ளன. இதில் 2 லட்சத்து 6 ஆயிரத்து 991 வாக்குகள் பதிவாயின. இதில் பா.ஜனதா வேட்பாளர் முனிரத்னா 1 லட்சத்து 25 ஆயிரத்து 990 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் குசுமா 67 ஆயிரத்து 877 வாக்குகளும், ஜனதா தளம்(எஸ்) வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி 10 ஆயிரத்து 269 வாக்குகளும் பெற்று தோல்வி அடைந்தனர். பா.ஜனதா வேட்பாளர் முனிரத்னா, தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் குசுமாவை விட 57 ஆயிரத்து 936 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2,497 வாக்குகள் நோட்டாவுக்கு விழுந்துள்ளன. 57 ஓட்டுகள் செல்லாதவை என்று அறிவிக்கப்பட்டது.
வெற்றி வாகை
அதேபோல், சிரா தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 15 ஆயிரத்து 776 வாக்குகள் உள்ளன. இதில் 1 லட்சத்து 81 ஆயிரத்து 596 வாக்குகள் பதிவாயின. இதில் பா.ஜனதா வேட்பாளர் ராஜேஸ்கவுடா 76 ஆயிரத்து 564 வாக்குகளை பெற்று வெற்றிபெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் டி.பி.ஜெயச்சந்திரா 63 ஆயிரத்து 150 வாக்குகளும், ஜனதா தளம்(எஸ்) வேட்பாளர் அம்மஜம்மா 36 ஆயிரத்து 783 வாக்குகளும் பெற்றனர். பா.ஜனதா வேட்பாளர் ராஜேஸ்கவுடா தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் டி.பி.ஜெயச்சந்திராவை விட 13 ஆயிரத்து 414 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். 643 வாக்குகள் நோட்டாவுக்கு விழுந்தன. 182 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டது. பா.ஜனதா தொண்டர்கள், ஓட்டு எண்ணிக்கை மையங்கள் முன்பு அதிக எண்ணிக்கையில் கூடி நடனமாடியும், மேள-தாளங்கள் முழங்கவும் வெற்றியை கொண்டாடினர். கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சிரா தொகுதியில் பா.ஜனதா 3-வது இடத்தை பிடித்திருந்தது.
ஆனால் இப்போது அக்கட்சி காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகளை பின்னுக்கு தள்ளி வெற்றிக்கனியை பறித்துள்ளது. காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் மண்ணை கவ்வியுள்ளன. அந்த தொகுதியில் 15 முறை தோல்வியை தழுவிய பா.ஜனதா 16-வது முயற்சியில் வெற்றி வாகை சூடியுள்ளது. இடைத்தேர்தல் வெற்றி மூலம் காங்கிரஸ் வசம் இருந்த ஆர்.ஆர்.நகர், ஜனதா தளம்(எஸ்) வசம் இருந்த சிரா ஆகிய 2 தொகுதிகளை ஆளும் பா.ஜனதா பறித்திருப்பதன் மூலம் சட்டசபையில் அக்கட்சி தனது பலத்தை கூட்டிக்கொண்டுள்ளது.