பெங்களூருவில் தனியார் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ரூ.45 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்

பெங்களூருவில் தனியார் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.45 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. இதில், தீயணைப்பு படைவீரர்கள் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.;

Update: 2020-11-10 19:18 GMT
பெங்களூரு, 

பெங்களூரு பேடராயனபுரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஒசகுட்டதஹள்ளி அருகே பாபுஜிநகர் 1-வது மெயின் ரோட்டில் ஆயாஷ் பாஷா என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் உள்ள மற்றொரு கட்டிடம் குடோனாக மாற்றப்பட்டு சச்சான் என்பவர் கிருமி நாசினிகள் மற்றும் ரசாயன பொருட்கள் அடங்கிய பேரல்களை வைத்திருந்தார். நேற்று காலையில் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் 4 தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். காலை 11 மணியளவில் தொழிற்சாலையில் இருந்த குடோனில் திடீரென்று தீப்பிடித்தது.

அந்த தீ மளமளவென அங்கிருந்த பொருட்களில் பிடித்து எரியத்தொடங்கியது. மேலும் பிளாஸ்டிக் தொழிற்சாலை மற்றும் வாகனங்கள் நிறுத்தும் பகுதிக்கும் தீ பரவி எரியத் தொடங்கியது. குறிப்பாக ரசாயன பொருட்களிலும் தீப்பிடித்தது. இதை பார்த்து 4 தொழிலாளர்களும் அதிர்ச்சி அடைந்தார்கள். உடனடியாக அவர்கள் தொழிற்சாலையில் இருந்து வெளியே ஓடிவந்து விட்டனர். இந்த நிலையில், ரசாயன பொருட்களில் தீப்பிடித்ததால் தொழிற்சாலையில் இருந்து விண்ணை முட்டும் அளவுக்கு கரும்புகை வெளியேறிய வண்ணம் இருந்தது.

வீடுகளை விட்டு வெளியேறினர்

இதுபற்றி தகவல் அறிந்ததும் முதலில் 3 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு படைவீரர்கள் மற்றும் பேடராயனபுரா போலீசார் விரைந்து வந்தனர். தொழிற்சாலையில் பிடித்த தீயை அணைக்க தீயணைப்பு படைவீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்தார்கள். ஆனாலும் தொழிற்சாலையில் பிடித்த தீயை அணைக்க முடியவில்லை. இதையடுத்து, மேலும் 18 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டது. இதற்கிடையில், தொழிற்சாலையில் இருந்து கரும்புகை தொடர்ந்து வெளியேறியதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது.

இதையடுத்து, முன் எச்சரிக்கையாக அப்பகுதியில் வசிப்பவர்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறினார்கள். ரசாயன பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்களில் தீப்பிடித்ததால் தீயணைப்பு படைவீரர்களால் அணைக்க முடியாமல் திணறினர் ஒரு வழியாக நேற்று இரவு தொழிற்சாலையில் பிடித்த தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. ஆனாலும் தொழிற்சாலையில் இருந்த பிளாஸ்டிக் பொருட்கள், குடோனில் இருநத கிருமி நாசினி பேரல்கள், ரசாயன பொருட்கள் அடங்கிய பேரல்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. தீ விபத்திற்கான காரணம் என்ன? என்பது தெரியவில்லை.

ரூ.45 லட்சம் பொருட்கள்

இதுகுறித்து மேற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் சஞ்சீவ் எம்.பட்டீல் நிருபர்களிடம் கூறுகையில், பிளாஸ்டிக் தொழிற்சாலையில் உள்ள குடோனில் ரசாயன பொருட்களில் தீப்பிடித்து மற்ற பகுதிகளுக்கும் பரவி எரிந்துள்ளது. பிளாஸ்டிக் தொழிற்சாலையில் இருந்த ரூ.45 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து நாசமாகி உள்ளது. மற்ற ரசாயன பொருட்களின் மதிப்பு தெரியவில்லை. இந்த தீ விபத்து சம்பவத்தில் தீயணைப்பு படைவீரர்களான ரேவண சித்தப்பா, சம்பத்ராஜ், சித்தேகவுடா, தொழிலாளியான பிஜுசிங் ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்துள்ளனர். சம்பவம் தொடர்பாக பேடராயனபுரா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர், என்றார்.

இதுகுறித்து பேடராயனபுரா போலீசார், குடோனில் ரசாயன பொருட்கள் வைத்திருந்த சச்சான் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த தீ விபத்து சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்