2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் மூலம் தமிழகத்திற்கு விடிவுகாலம் தரக்கூடிய ஆட்சி அமையும் - கடலூரில் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் மூலம் தமிழகத்திற்கு விடிவுகாலம் தரக்கூடிய ஆட்சி அமையும் என்று கடலூரில் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

Update: 2020-11-09 22:00 GMT
நெல்லிக்குப்பம்,

சிதம்பரம் அண்ணாமலைநகரில் நடந்த தே.மு.தி.க. தலைமை செயற்குழு உறுப்பினர் இல்ல திருமண வரவேற்பு விழாவுக்கு வருகை தந்த கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று மாலை கடலூர் திருவந்திபுரத்தில் உள்ள தேவநாதசுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். முன்னதாக ஒன்றிய செயலாளர் அய்யனார் தலைமையில் கட்சியினர் 108 கும்ப மரியாதையுடன் பிரேமலதா விஜயகாந்தை வரவேற்றனர்.

பின்னர் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நலம் பெற வேண்டி, தேவநாத சாமிக்கு வெள்ளி கிரீடம் சூடுவதற்காக, மாவட்ட செயலாளர் சிவக்கொழுந்து, அவைத்தலைவர் ராஜாராம், துணை செயலாளர் லெனின் மற்றும் நிர்வாகிகள் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான வெள்ளி கிரீடத்தை தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்திடம் வழங்கினர். பின்னர் அவர், கோவில் நிர்வாகத்திடம் வெள்ளி கிரீடத்தை வழங்கினார். தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜயபிரபாகரன், வருகிற சட்டமன்ற தேர்தலில் 3-வது அணி தான் ஆட்சி அமைக்கும் என கூறினார். அது அவராக சொன்ன தகவல் கிடையாது. அந்த சமயத்தில் 3-வது அணி அமைய வாய்ப்பு உள்ளதா? என நிருபர்கள் அவரிடம் கேள்வி எழுப்பி உள்ளனர். அதற்கு தான் அவர் பதில் அளித்துள்ளார்.

ஆனால் தேர்தல் வரும்போது என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். தே.மு.தி.க. பலமுறை தனித்து போட்டியிட்டு, தேர்தல் களத்தை சந்தித்து உள்ளது. அதனால் பொறுத்திருந்து பாருங்கள், தேர்தல் வரும்போது எது வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால் இன்று வரை நாங்கள் அ.தி.மு.க. கூட்டணியில் தான் உள்ளோம். செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தை கூட்டிய பிறகு, தேர்தல் நிலை குறித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தெளிவாக அறிவிப்பார்.

வருகிற சட்டமன்ற தேர்தலில் எந்தெந்த கட்சிகள், எந்த அணியுடன் கூட்டணி அமைக்க போகிறார்கள். யார், யார் எத்தனை இடங்களில் வெற்றி பெறப்போகிறார்கள் என்பது எல்லாம் ஒரு புதிராகத்தான் உள்ளது. ஏனென்றால் தற்போது நடைபெற உள்ள தேர்தல், எல்லோருக்கும் புதிய தேர்தலாகும். கலைஞர் இல்லாமல் ஸ்டாலினும், ஜெயலலிதா இல்லாமல் அ.தி.மு.க.வும் தேர்தல் களத்தை சந்திக்க உள்ளனர்.

வருகிற சட்டமன்ற தேர்தல் தமிழகத்தில் நிச்சயமாக ஒரு புது மாற்றத்தை உருவாக்கும். மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருப்பதால் அ.தி.மு.க. ஆட்சிக்கு எதிரான கருத்துகளை பதிவு செய்து வருகிறார். எங்களை பொறுத்தவரைக்கும் இந்த ஆட்சி நிறையும், குறையும் நிறைந்த ஆட்சியாகத்தான் உள்ளது. ஏனென்றால் அ.தி.மு.க. அரசு பல நல்ல விஷயங்களை செய்துள்ளது. கொரோனா காலத்தில் நல்ல நிர்வாகத் திறனை வெளிப்படுத்தி, மக்களுக்கு தேவையான பல பணிகளை செய்துள்ளது.

இதேபோல் அவர்கள் செய்ய வேண்டிய பல திட்டப்பணிகளை செய்யாமலும் உள்ளனர். அதாவது தற்போது பல இடங்களில் சாலைகள் சேதமடைந்து, குண்டும் குழியுமாக உள்ளது. நீர்நிலைகள் முறையாக தூர்வாரப்படாததால், தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலை உள்ளது.

கடைமடை பகுதி வரை தண்ணீர் சென்றால் தான், மக்களுக்கு தண்ணீர் பிரச்சினை ஏற்படாமல் இருக்கும். 2021-ம் ஆண்டு தேர்தல் மக்களாட்சியாக, தமிழகத்திற்கு விடிவுகாலம் தரக்கூடிய ஆட்சியாக அமையும். மேலும் தற்போது கொரோனா காலத்தில் ஓய்வெடுத்து வரும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், வருகிற சட்டமன்ற தேர்தலின் போது தமிழகம் முழுவதும் பிரசார பயணம் மேற்கொள்வார். தற்போது அவர் பூரண நலமுடன் உள்ளார்.

இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

முன்னதாக சென்னையில் இருந்து புதுச்சேரி வழியாக கடலூர் வந்த பிரேமலதா விஜயகாந்துக்கு மாவட்ட எல்லையான ரெட்டிச்சாவடியில் தே.மு.தி.க.வினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். இதில் மாநில துணை செயலாளர் பார்த்தசாரதி, மாவட்ட துணை செயலாளர்கள் ஏ.பி.ராஜ், சிவமுருகன், நகர செயலாளர்கள் சரவணன், ஒன்றிய செயலாளர்கள் அய்யனார், தென்னரசு, முன்னாள் மாநில துணை செயலாளர் உமாநாத், நெல்லிக்குப்பம் நகர செயலாளர் கஜேந்திரன், மாவட்ட விஜயகாந்த் மன்ற செயலாளர் வசந்த், சண்முக பாண்டியன் ரசிகர் மன்ற தலைவர் விஜயராஜ், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் ராஜ், வடக்கு ஒன்றிய செயலாளர் சித்தநாதன், ஒன்றிய அவைத்தலைவர் ராஜா, மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் ராஜசேகரன், ஒன்றிய துணை செயலாளர் கலாநிதி, மாவட்ட விவசாய அணி துணை செயலாளர் அய்யப்பன், விஜயகாந்த் மன்ற துணை செயலாளர் குமரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்