தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் என்பதால் மிரட்டுவதாக புகார்: பதவியை ராஜினாமா செய்யப்போவதாக ஊராட்சி தலைவி அறிவித்ததால் பரபரப்பு - அதிகாரிகள் நேரில் விசாரணை
தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் என்பதால் தன்னை மிரட்டுவதாக கூறி ஊராட்சி மன்ற தலைவி, தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தினார்கள்.
மானாமதுரை,
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கால்பிரிவு ஊராட்சி மன்ற தலைவியாக இருப்பவர் ராஜேஸ்வரி (வயது 42). இந்த ஊராட்சியில் தலைவர் பதவி தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது. கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலின் போது ராஜேஸ்வரி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
அந்த ஊராட்சி துணைத்தலைவர் நாகராஜ் மற்றும் ஊராட்சிக்குட்பட்ட வார்டு உறுப்பினர்கள் ராஜேஸ்வரியை புறக்கணித்து வந்ததாக கூறப்படுகிறது. அதோடு ஊராட்சியின் காசோலை, ஊராட்சி அலுவலகத்தின் சாவிகள் ஆகியவற்றை அவரிடம் கொடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. மேலும் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தென்னை மரங்களை குத்தகைக்கு விட மறுத்ததாகவும், அவரை ஊராட்சி பணிகளை செய்ய விடாமல் தடுத்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்த நிலையில் நேற்று ஊராட்சி மன்ற தலைவி ராஜேஸ்வரி, எனது பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக திடீரென அறிவித்தார். மேலும் அவர் எழுதிய ராஜினாமா கடிதத்தை காண்பித்தார். இதனால் கலால்பிரிவு ஊராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அவர் இந்த கடிதத்தை கலெக்டர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்க இருப்பதாக கூறினார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் மானாமதுரை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுந்தரமகாலிங்கம், அழகுமீனாள், ஊராட்சி ஒன்றிய தலைவர் லதா அண்ணாத்துரை, ஒன்றிய கவுன்சிலர் அண்ணாத்துரை, ஊராட்சி கூட்டமைப்பின் தலைவர்கள் சண்முகநாதன், பொறுப்பாளர்கள் தேசிங்கராஜா, சடையப்பன், முத்துராக்கு ஆகியோர் கால்பிரிவு ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு வந்தனர்.
அவர்கள் ஊராட்சி மன்ற தலைவி ராஜேஸ்வரியிடம் நேரில் விசாரணை நடத்தினர். விசாரணையின் போது அவருக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து புகாராக எழுதி தரும்படி கேட்டனர். பின்னர் அவர் புகார் எழுதி கொடுத்தார். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நபர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவி ராஜேஸ்வரி நிருபர்களிடம் கூறியதாவது:-
நான் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் என்பதற்காக இந்த ஊராட்சியில் பணியாற்றும் துணைத்தலைவர் மற்றும் அவரை சார்ந்த ஆதரவாளர்கள் ஒன்றிணைந்து எனக்கு எதிராக பல வேலைகளை செய்து வருகின்றனர். இதுகுறித்து நான் யாரிடம் சொல்வது என்று தெரியாமல் இருந்து வந்தேன். தற்போது இதுகுறித்து எனது புகார்களை சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கொடுத்துள்ளேன்.
அதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறி இருக்கிறார்கள். சில சமயங்களில் ஊராட்சி துணைத்தலைவரின் ஆட்கள் என் வீட்டிற்கு வந்து மிரட்டல் விடுத்து சென்று உள்ளனர். இது குறித்தும் அதிகாரிகளின் கவனத்துக்கு எடுத்து சென்று உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து மானாமதுரை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் அழகுமீனா கூறுகையில், “ஊராட்சி மன்ற தலைவர் கொடுத்த புகார் குறித்து விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அவரை ராஜினாமா செய்யும் முடிவை விலக்கி கொள்ளுமாறு கேட்டு இருக்கிறோம். அவரும் எங்கள் நடவடிக்கைக்காக தனது முடிவை ஒத்தி வைத்து இருப்பதாக தெரிவித்தார்” என்று கூறினார்.