பாம்பனில் கடல் சீற்றம்: புதிய ரெயில் பால பணிகள் தற்காலிக நிறுத்தம்

பாம்பனில் கடல் சீற்றம் காரணமாக புதிய ரெயில் பால பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.;

Update: 2020-11-09 22:00 GMT
ராமேசுவரம்,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையையொட்டி நவம்பர் முதல் ஜனவரி மாதம் வரை ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் வடக்கு கடல் பகுதி சீற்றமாக காணப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் வடகிழக்கு பருவமழை சீசன் தொடங்கிவிட்டதால், பாம்பன் வடக்கு கடலானது கடந்த 3 நாட்களுக்கு மேலாகவே சீற்றமாக காணப்பட்டு வருவதுடன், நீரோட்டமும் வேகமாக உள்ளது. நேற்று பலத்த காற்று வீசியது. இதனால் கடல் அலையானது வடக்கு கடற்கரையில் புதிய ரெயில் பால பணிகளுக்காக நிறுத்தி இருந்த இரும்பினாலான மிதவை உள்ளிட்ட உபகரணங்கள் மற்றும் தடுப்புச்சுவர் மீது மோதி, பல அடி உயரத்திற்கு சீறி எழுந்தன.

கடல் சீற்றம் அதிகமாக இருப்பதால் கடலுக்குள் புதிய ரெயில் பால பணிகளுக்காக எந்திரம் மூலம் தூண்கள் அமைக்கும் பணிகளில் சிக்கல் ஏற்பட்டது. எனவே நேற்று முதல் புதிய ரெயில் பால பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. அதுபோல் பாலத்தின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரும்பினாலான மிதவை கடல் அலைகளின் வேகத்தால் ரெயில் பாலத்தில் மோதுவது போல் தள்ளாடிக் கொண்டிருந்தது. இதைதொடர்ந்து ரெயில்வே கட்டுமான பிரிவு பொறியாளர்கள், பாலத்தில் அந்த மிதவை மோதுவதை தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டனர். பாம்பன் பகுதியில் சீறி எழுந்து வரும் கடல் அலைகளை நேற்று ரோடு பாலத்தில் நின்றபடி ஏராளமானோர் பார்த்து ரசித்தனர்.

மேலும் செய்திகள்