துபாயில் இருந்து மதுரைக்கு விமானத்தில் ஏ.சி. எந்திரத்தில் வைத்து கடத்திய ரூ.15¾ லட்சம் தங்கம் பறிமுதல்
துபாயில் இருந்து மதுரைக்கு விமானத்தில் ஏ.சி. எந்திரத்தில் வைத்து கடத்திய ரூ.15¾ லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மதுரை,
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளுக்கான விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியர்களை மத்திய அரசு, ‘வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ் விமானத்தில் இந்தியா அழைத்து வருகிறது.
அந்த வகையில் துபாய், சிங்கப்பூர், அபுதாபி, லெபனான், மாலத்தீவு, மலேசியா உள்ளிட்ட பல நாடுகளில் சிக்கி தவித்த இந்தியர்கள் விமானம் மூலம் மதுரைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். வெளி நாடுகளில் இருந்து இதுவரை மதுரைக்கு 95 விமானங்கள் வந்துள்ளன.
அதில் 13 ஆயிரத்து 315 பயணிகள் மதுரை வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு மதுரை விமான நிலையத்தில் வைத்து கொரோனா பரிசோதனையுடன், சுங்கத்துறையினரின் சோதனையும் நடக்கிறது. இந்த சோதனைகளுக்கு பிறகே அவர்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
இந்த நிலையில், துபாயில் இருந்து வந்தே பாரத் திட்டத்தின் கீழ் மதுரைக்கு ஒரு விமானம் வந்தது. அந்த விமானத்தில் கடத்தல் தங்கம் கொண்டு வரப்படுவதாக மதுரை சுங்கப்புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து துபாயில் இருந்து வந்த விமானத்தில் வந்திறங்கிய பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை சுங்கப்புலனாய்வு துறை துணை கமிஷனர் ஜெய்சன்பிரவீன்குமார் தலைமையிலான அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது அந்த விமானத்தில் வந்த திருச்சியை சேர்ந்த 49 வயதுடைய நபர் ஒருவரின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதன் பின்னர் அவர் வைத்திருந்த உடைமையை சோதனை செய்து பார்த்தபோது அதில் இருந்த ஏ.சி. எந்திரத்தில் காப்பர் கம்பியில் மறைத்து தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரிடம் விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து துணை கமிஷனர் ஜெய்சன் பிரவீன்குமார் கூறும்போது, “தற்போது சிக்கிய நபரிடம் இருந்து 299 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதன் மதிப்பு ரூ.15 லட்சத்து 78 ஆயிரத்து 147 ஆகும். கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள், அங்கிருந்து தங்கத்தை பயணிகளிடம் கொடுத்து அனுப்புகின்றனர். பணத்திற்கு ஆசைப்பட்டு ஒரு சிலர் இதுபோன்ற செயலில் ஈடுபட்டு மாட்டி கொள்கிறார்கள். எனவே வெளிநாட்டுக்கு சென்று விட்டு வரும் பயணிகள் மற்றவர்கள் கொடுக்கும் பொருட்களை வாங்கக்கூடாது” என்றார்.