திருவண்ணாமலையில் பா.ஜ.க.வினர் சாலை மறியல் - 113 பேர் கைது

திருவண்ணாமலையில் சாலை மறியலில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் 113 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-11-09 22:00 GMT
திருவண்ணாமலை,

வேல் யாத்திரை தொடங்க சென்ற பா.ஜ.க. மாநில தலைவர் முருகன் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், பா.ஜ.க.வின் வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்கக்கோரியும் நேற்று மதியம் மாநில வர்த்தக அணி துணைத்தலைவர் தணிகைவேல் ஆலோசனையின்படி திருவண்ணாமலை அண்ணா சிலை அருகில் பா.ஜ.க.வினர் சாலை மறியல் போராட்டம் நடந்தது.

மாவட்ட துணைத்தலைவர் அருணை ஆனந்தன் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞர் அணி பொது செயலாளர் மூவேந்தன், எஸ்.சி.அணி பொதுச் செயலாளர் விஜயராஜ், மாவட்ட தொழில் பிரிவு செயலாளர் நடராஜன், மாவட்ட அரசு தொடர்பு பிரிவு செயலாளர் வெங்கடேசன் உள்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

வேல் யாத்திரைக்கு தடை விதித்த தமிழக அரசைக் கண்டித்தும், வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்க கோரியும் வெற்றிவேல், வீரவேல் என்று கோஷமிட்டனர். மறியலில் ஈடுபட்ட 58 பெண்கள் உள்பட 113 பேரை திருவண்ணாமலை உதவி போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி தலைமையிலான போலீசார் கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து அவர்கள் திருவண்ணாமலை அவலூர்பேட்டை சாலையில் உள்ள ஒரு மண்டபத்தில் தங்க வைத்தனர். மாலையில் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் மாலை சுமார் 6.30 மணி வரை அவர்கள் விடுவிக்கப்படாததால் மண்டபத்தில் இருந்த பா.ஜ.க.வினர். திடீரென மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்