மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் மறியல் போராட்டம்

தர்மபுரியில் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-11-09 22:00 GMT
தர்மபுரி, 

அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்க கூட்டமைப்பின் தர்மபுரி மாவட்ட பிரிவு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி பாரதிபுரத்திலுள்ள அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகம் முன்பு நேற்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு சங்க மண்டல தலைவர் சின்னசாமி தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் கிருஷ்ணன், நிர்வாகி சேகர், சி.ஐ.டி.யு. தொழிற்சங்க மாவட்ட செயலாளர் நாகராஜ், ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்க மாவட்ட பொதுச்செயலாளர் நாகராஜ், ஐ.என்.டி.யு.சி. தொழிற்சங்க நிர்வாகிகள் தங்கவேல், சென்னகிருஷ்ணன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.

அப்போது அரசு போக்குவரத்துக்கழக மண்டல அலுவலகம் முன்பு தொழிலாளர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு தீபாவளி போனசை 20 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும். தீபாவளி பண்டிகை முன்பணமாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். 14-வது ஊதியக்குழு ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும். தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட டி.ஏ. தொகையை நிலுவையுடன் வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பண பலன்களை உடனே வழங்க வேண்டும்.

வருகை பதிவில் உள்ள குளறுபடிகளை சரி செய்து தொழிலாளர்களின் ஊதியத்தில் இருந்து பிடிக்கப்பட்ட தொகையை வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்