வேப்பனப்பள்ளி அருகே வேனில் கடத்தி வரப்பட்ட ரூ.8¼ லட்சம் குட்கா பறிமுதல்
வேப்பனப்பள்ளி அருகே வேனில் கடத்தி வரப்பட்ட ரூ.8 லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
வேப்பனப்பள்ளி,
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ளது நேரலகிரி. இங்குள்ள சோதனைச்சாவடியில் வேப்பனப்பள்ளி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சரக்கு வேன் ஒன்று அந்த வழியாக வந்தது. அந்த வாகனத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர். உடனே வேனை நிறுத்திய டிரைவர் போலீசை கண்டதும் கீழே இறங்கி தப்பி ஓடினார். தொடர்ந்து போலீசார் அந்த வேனை சோதனை செய்தபோது அதில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த வேனை வேப்பனப்பள்ளி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்ற போலீசார் அதில் இருந்த குட்கா பொருட்களை கணக்கிட்டனர். அதில் 13 பண்டல்களில் 9 வகையான குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.8 லட்சத்து 30 ஆயிரம் ஆகும். மேலும், ஆவணங்கள் மூலம் இவை கர்நாடக மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து குட்கா மற்றும் சரக்கு வேனை போலீசார் பறிமுதல் செய்தனர். அதை கடத்தி வந்தவர்கள் யார்? என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். வேப்பனப்பள்ளி அருகே ரூ.8 லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.